செய்தித் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் தற்காலிகமாக நிறுத்தம்

செய்தித் தொலைக்காட்சிகளுக்கு வாரந்தோறும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
செய்தித் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் தற்காலிகமாக நிறுத்தம்
செய்தித் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் தற்காலிகமாக நிறுத்தம்


மும்பை: விளம்பரத்துக்காக, செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் போலியாக டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில், செய்தி தொலைக்காட்சிகளுக்கு வாரந்தோறும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள செய்தித் தொலைக்காட்சிகளின் வாராந்திர ரேட்டிங்கை தற்காலிகமாக நிறுத்த ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) முடிவு செய்துள்ளது.

செய்தித் தொலைக்காட்சிகளின் பார்வையாளர்களை கணக்கிடும் தற்போதைய முறையை மறுபரிசீலனை செய்து, அதற்கான வழிமுறைகளை மேம்படுத்தும் வகையில், வாரந்தோறும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங்கை 12 வாரங்களுக்கு நிறுத்த முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர வருவாயைப் பெருக்கும் வகையில், போலியாக டிஆர்பியை உயர்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக முன்னணி செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

செட் டாப் பாக்ஸ்களை பொருத்தும்போது, அதில் அதிகமானோர் ஒரு சேனலைப் பார்ப்பது போல அமைப்பது, ஏழை குடும்பத்தினர், ஒரு குறிப்பிட்ட சேனலை நாள் முழுவதும் டிவியில் வைத்திருக்க மாதந்தோறும் பணம் கொடுப்பது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு, டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து குறிப்பிட்ட சில செய்தி தொலைக்காட்சிகள் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலியாக டிஆர்பியை உயர்த்திக் காண்பித்து, அதிக விளம்பரத்தைப் பெற்று வருவாயை ஈட்டியதாக காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com