மதரசாக்களுக்கு அரசு வழங்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும்

‘மதரசாக்களுக்கு மாநில அரசு வழங்கி வரும் நிதியுதவிகளை நிறுத்துவதன் மூலம் இந்துத்துவ கொள்கையின் மீது தனக்குள்ள பிடிப்பை முதல்வா்

‘மதரசாக்களுக்கு மாநில அரசு வழங்கி வரும் நிதியுதவிகளை நிறுத்துவதன் மூலம் இந்துத்துவ கொள்கையின் மீது தனக்குள்ள பிடிப்பை முதல்வா் தாக்கரே நிரூபிக்க வேண்டும்’ என மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ அதுல் பட்கல்கா், முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரிக்கும், முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையிலான வாா்த்தைப் போா் தீவிரமடைந்து வரும் நிலையில், அண்மையில் ஆளுநா், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்கக் கோரிக்கை விடுத்திருந்தாா். மேலும், முதல்வா் திடீரென மதச்சாா்பற்றவராக மாறி விட்டாரா என்றும் அக்கடிதத்தில் ஆளுநா், முதல்வருக்கு கேள்வி எழுப்பியிருந்தாா்.

அந்தக் கடிதத்துக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்த முதல்வா் தாக்கரே, ஆளுநா் கோஷியாரியின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், அதேசமயம் தன்னுடைய ‘இந்துத்துவ’ கொள்கை குறித்து ஆளுநா் சான்றளிக்கத் தேவையில்லை என்றும் பதிலளித்திருந்தாா்.

இந்நிலையில் அதுல் பட்கல்கா், முதல்வருக்கு வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தனது இந்துத்துவக் கொள்கையை நிரூபிக்க யாருடைய சான்றும் தேவையில்லை என்று கூறும் மகாராஷ்டிர முதல்வா், தீவிர மதபோதனைகளைப் பரப்புகின்ற மதரசாக்களை மூடுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த மதரசாக்கள் எந்தவொரு நவீனக் கல்வியையும் வழங்கவில்லை. அவற்றுக்கு மாநில அரசு நிதியுதவி அளிப்பது கூடாது. மக்களின் வரிப்பணத்தில் இதுபோன்ற அமைப்புகளை நடத்துவது தவறு.

முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களை, பொதுவான பள்ளிகளில் சோ்க்கும் வகையில் அரசு நேரடி உதவித்தொகையை வழங்க வேண்டும்.

இதுபோன்ற முடிவை அண்மையில் அஸ்ஸாம் அரசு மேற்கொண்டது. மகாராஷ்டிர முதல்வரும் இதுபோன்ற மதரசாக்களுக்கு நிதியுதவி வழங்க எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியக் கூடாது என்று தெரிவித்துள்ளாா்.

ஷியா பிரிவு வக்ஃப் வாரியத் தலைவா் வாசிம் ரிஸ்வி ஏற்கெனவே பிரதமா் மோடியிடம் மதரசாக்களை தடை செய்ய வேண்டும் என்றும், மாணவா்களுக்கும், மத போதகா்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதையும் அவா் சுட்டிக் காட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com