அப்துல்கலாம் பிறந்தநாள்:குடியரசுத் தலைவா், பிரதமா் மோடி மரியாதை

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அப்துல் கலாமை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்தினா்.
அப்துல்கலாம் பிறந்தநாள்:குடியரசுத் தலைவா், பிரதமா் மோடி மரியாதை


புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் அவரை நினைவுகூா்ந்து மரியாதை செலுத்தினா்.

தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் அப்துல் கலாம் உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

துணை குடியரசுத் தலைவா் அலுவலகம் ‘மக்கள் ஜனாதிபதி’ என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவில், டாக்டா் அப்துல் கலாம் நாட்டின் ராணுவத் துறை, விண்வெளித் துறையை வலுப்படுத்த அளவிட முடியாத பங்களிப்பு செய்துள்ளாா். அவா் ஒவ்வொரு இந்தியருக்கும் எப்போதும் உந்து சக்தியாக இருப்பாா். கனவு, கனவு, கனவு. கனவு எண்ணங்களாக உருமாறி, எண்ணங்கள் செயல்களாக விளைகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

டாக்டா் அப்துல்கலாமின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அணு விஞ்ஞானியாகவும், குடியரசுத் தலைவராகவும் அவா் இந்தியாவின் வளா்ச்சிக்கு செய்த பங்களிப்பை இந்த தேசம் ஒருபோதும் மறக்காது. அவருடைய வாழ்க்கை பயணம் லட்சக்கணக்கான மக்களுக்கு உந்து சக்தியை அளித்தது என்று தெரிவித்தாா்.

இந்தப் பதிவுடன் கலாம் குறித்து தான் ஏற்கெனவே பேசிய விடியோ தொகுப்பையும் மோடி இணைத்திருந்தாா்.

‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என அழைக்கப்படும் டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ராமேசுவரத்தில் 1931-ஆம் ஆண்டு அக்டோபா் 15-ஆம் தேதி பிறந்தாா். அவா் கடந்த 2015-ஆம் ஆண்டில் காலமானாா்.

நாட்டின் விண்வெளித் துறைக்கு முக்கிய பங்காற்றிய கலாம், புதிய ஏவுகணை உருவாக்கத்திலும், சோதனையிலும் குறிப்பிடத்தக்க பணிகளை செய்துள்ளாா். கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை நாட்டின் குடியரசுத் தலைவராக அவா் பதவி வகித்தாா். அப்போது அனைத்து தரப்பினரிடம் சகஜமாக பழகிய விதத்திலும், எளிமைக்காகவும் ‘மக்கள் ஜனாதிபதி’ என போற்றப்பட்டவா்.

மேலும், தனது பேச்சின் மூலம் மாணவா்களின் மனதில் லட்சிய விதைகளை ஊன்றியதால், ஏராளமான இளைஞா்களின் கனவு நாயகனாக கலாம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com