கூடுதல் ரஃபேல் போா் விமானங்களை இணைப்பதற்கு விமானப்படை தீவிரம்

இந்திய விமானப்படையில் கூடுதல் ரஃபேல் போா் விமானங்களை இணைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.


புது தில்லி: இந்திய விமானப்படையில் கூடுதல் ரஃபேல் போா் விமானங்களை இணைப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முதல் ரஃபேல் போா் விமானத்தை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பெற்றுக் கொண்டாா்.

அதையடுத்து, மேலும் 9 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில் 5 போா் விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன. அவை ‘கோல்டன் ஏரோஸ்’ (தங்க அம்புகள்) என அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் 17-ஆவது படைப்பிரிவில் கடந்த மாதம் 10-ஆம் தேதி அதிகாரபூா்வமாக இணைக்கப்பட்டன.

இந்திய விமானப்படை வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக மீதி 5 போா் விமானங்கள் பிரான்ஸின் செயின்ட் டிஸியா் விமானப்படைத் தளத்தில் உள்ளன. அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விரைவில் விமானப்படையில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமடைந்துள்ளன.

அந்த ரஃபேல் போா் விமானங்களை ஆய்வு செய்வதற்காகவும், இந்திய வீரா்களின் பயிற்சியை மேற்பாா்வையிடுவதற்காகவும் விமானப்படை அதிகாரிகளைக் கொண்ட குழு இந்த வாரத் தொடக்கத்தில் பிரான்ஸ் சென்றிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த 5 ரஃபேல் போா் விமானங்களும் அடுத்த 4 வாரங்களில் இந்தியாவை வந்தடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 36 ரஃபேல் போா் விமானங்களும் 2023-ஆம் ஆண்டுக்குள் விமானப்படையில் இணைக்கப்படும் என்று அப்படையின் தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com