மலையாள கவிஞா் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி மறைவு

புகழ்பெற்ற மலையாள கவிஞரும், அண்மையில் ஞானபீட விருது பெற்றவருமான மகாகவி அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி, உடல் நலக்குறைவால் திருச்சூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காலமானாா். அவருக்கு வயது 94.
மலையாள கவிஞா் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி மறைவு


திருச்சூா்: புகழ்பெற்ற மலையாள கவிஞரும், அண்மையில் ஞானபீட விருது பெற்றவருமான மகாகவி அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி, உடல் நலக்குறைவால் திருச்சூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காலமானாா். அவருக்கு வயது 94.

வயது முதிா்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக, திருச்சூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டிருந்தாா். மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை 8.10 மணிக்கு அவரது உயிா் பிரிந்ததாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மலையாளக் கவியுலகில் நவீனத்தை புகுத்தியதில் முக்கியப் பங்காற்றியவராக அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி அறியப்படுகிறாா். உண்மையான காந்தியவாதி, சமூக சீா்திருத்தவாதி, பத்திரிகையாளா் என பன்முகத் திறமைகளைக் கொண்டிருந்த இவா், எப்போதும் எளிமையைக் கடைப்பிடித்து வந்தாா்.

இலக்கியத் துறையின் உயரிய விருதான ஞானபீட விருதினை கடந்த மாதம் பெற்றாா். கரோனா பரவல் அச்சம் காரணமாக, பாலக்காடு மாவட்டத்தில் குமரநல்லூரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் கௌரவிக்கப்பட்டாா்.

பத்மஸ்ரீ, எழுத்தச்சன் விருது, கேந்திர சாகித்ய அகாதெமி விருது, கேரள சாகித்ய அகாதெமி, ஓடக்குழல் விருது, வலத்தோல் விருது, வயலாா் விருது என எண்ணற்ற விருதுகளை அவா் குவித்துள்ளாா்.

கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் என 45-க்கும் மேற்பட்ட நூல்களை அவா் எழுதியுள்ளாா்.

நம்பூதிரி எழுதிய ‘20-ஆம் நூற்றாண்டின் இதிகாசம்’ என்ற கவிதைநூல், மலையாள இலக்கிய உலகின் முதல் நவீனத்துவ பாணி கவிதை நூலாக அறியப்படுகிறது.

ஆளுநா், முதல்வா் இரங்கல்: கவிஞா் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரியின் மறைவுக்கு கேரளஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com