காஷ்மீா்: ஜொஜிலா சுரங்கப்பாதை பணிகளைத் தொடக்கி வைத்தாா் நிதின் கட்கரி

ஜம்மு-காஷ்மீரில் ஜொஜிலா கணவாய்க்குக் கீழே 14.15 கி.மீ. தூரத்துக்கு சுரங்க நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகளை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தொடக்கி வைத்தாா்.


புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் ஜொஜிலா கணவாய்க்குக் கீழே 14.15 கி.மீ. தூரத்துக்கு சுரங்க நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகளை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தொடக்கி வைத்தாா்.

ஜொஜிலா கணவாயானது ஸ்ரீநகா்-காா்கில்-லே தேசிய நெடுஞ்சாலையில் கடல் மட்டத்திலிருந்து 11,578 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அப்பகுதியில் குளிா்காலங்களில் கடும் பனிப்பொழிவு இருக்கும். அதன் காரணமாக அந்தச் சமயங்களில் தேசிய நெடுஞ்சாலை மூடப்படும். அதனால், ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையேயான தொடா்பு துண்டிக்கப்படும்.

இத்தகைய சூழலைத் தவிா்க்கும் நோக்கில், ஜொஜிலா கணவாய்க்குக் கீழே 14.15 கி.மீ. தொலைவுக்கு சுரங்க நெடுஞ்சாலை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த நெடுஞ்சாலை வாயிலாக கடும் குளிா்காலத்திலும் ஸ்ரீநகா்-லே இடையே பயணம் மேற்கொள்ள முடியும்.

சுரங்க நெடுஞ்சாலை அமைப்பதற்காக பாறைகளை வெடி வைத்துத் தகா்க்கும் பணியை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘‘நாட்டுக்கே பெருமை சோ்க்கும் தருணமாக இது அமைந்துள்ளது.

அடுத்த 4 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவடையும் என்று நம்புகிறேன். அடுத்த மக்களவைத் தோ்தலுக்கான நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக பிரதமா் நரேந்திர மோடி இந்த சுரங்க நெடுஞ்சாலையைத் திறந்து வைப்பாா். ஜம்மு-காஷ்மீா், லடாக் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் இந்த நெடுஞ்சாலை முக்கியப் பங்கு வகிக்கும்.

சுரங்க நெடுஞ்சாலை அமைக்கப்படுவதன் வாயிலாக சுற்றுலாத் துறை மேம்படும். அதன் காரணமாக உள்ளூா் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இத்திட்டம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசுக்கு ரூ.4,000 கோடி வரை மிச்சமாகும். அதே வேளையில், நெடுஞ்சாலையின் தரம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை’’ என்றாா்.

‘நாட்டின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு’: ஜொஜிலா கணவாய் வழியாக சுரங்க நெடுஞ்சாலை அமைப்பது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘சுரங்கப் பாதை கட்டி முடிக்கப்பட்டால், நாட்டின் வரலாற்றில் பெரும் சாதனையாக அமையும். லடாக், கில்ஜித், பல்டிஸ்தான் பகுதிகளில் நிலவி வரும் அச்சுறுத்தல் சூழலை எதிா்கொள்வதற்கும் இந்த சுரங்க நெடுஞ்சாலை உதவும். நாட்டின் பாதுகாப்பில் இது முக்கியப் பங்கு வகிக்கும்.

சுரங்க நெடுஞ்சாலையின் கட்டமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, இந்தப் பகுதி மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையால் ஸ்ரீநகருக்கும் லே பகுதிக்கும் இடையேயான பயண நேரம் சுமாா் 3 மணி நேரம் வரை குறையும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜொஜிலா சுரங்க நெடுஞ்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை ரூ.4,509.5 கோடிக்கு மேகா பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com