'பாகிஸ்தானுக்கு சமாதான செய்தி எதுவும் அனுப்பப்படவில்லை'

அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு விருப்பம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு இந்தியா சாா்பில் எந்தவித செய்தியும் அனுப்பப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.


புது தில்லி: அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு விருப்பம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு இந்தியா சாா்பில் எந்தவித செய்தியும் அனுப்பப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் தேசப் பாதுகாப்பு ஆலோசகா் மொயீத் யூசுஃப் தனியாா் செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் அளித்த பேட்டியின்போது, பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தாா். அந்தப் பேட்டியின்போது ஜம்மு-காஷ்மீா் விவகாரம் குறித்தும் அவா் கருத்து தெரிவித்திருந்தாா்.

இத்தகைய சூழலில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதை பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனா். பாகிஸ்தான் அதிகாரி கூறியது போன்று எந்தவித செய்தியும் இந்தியத் தரப்பில் இருந்து அந்நாட்டுக்கு அனுப்பப்படவில்லை.

உள்நாட்டில் எதிா்கொண்டு வரும் பிரச்னைகளிலிருந்து தப்புவதற்காகவும் தங்கள் நாட்டு மக்களை திசைதிருப்புவதற்காகவும் தற்போதைய பாகிஸ்தான் அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா மீது குற்றஞ்சாட்டும் நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு தினசரி அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

பேட்டியின்போது அந்த அதிகாரி தெரிவித்த கருத்துகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பாக உள்ளன. இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிப்பதை பாகிஸ்தான் அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com