ஓடிடி தளங்களை முறைப்படுத்தக் கோரி பொதுநல மனு

மேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களை முறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


புது தில்லி: அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களை முறைப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இணைய வழியிலேயே திரைப்படங்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் காணும் வசதி ‘ஓவா் தி டாப்’ (ஓடிடி) என்றழைக்கப்படுகிறது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலேயே வெளியிடப்பட்டன.

பொது முடக்கத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்ததன் காரணமாக அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்தது. இந்நிலையில், ஓடிடி தளங்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளை முறைப்படுத்தக் கோரி வழக்குரைஞா்களான சஷாங்க் சேகா் ஜா, அபூா்வா அா்ஹதியா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக திரையரங்குகளை கூடிய விரைவில் திறப்பதற்கு வாய்ப்பில்லை. அதைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான தயாரிப்பாளா்கள் தங்கள் திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் எந்தவித தணிக்கை சான்றிதழும் பெறாமல் ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனா்.

தணிக்கை அமைப்பு: இணையவழியில் வெளியிடப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்வதற்கு எந்தவித அமைப்பும் இதுவரை நிறுவப்படவில்லை. அதனால், சமூகத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட சுய ஒழுங்குமுறை விதிகளில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, ஹாட்ஸ்டாா் உள்ளிட்ட எந்த ஓடிடி தளமும் கையெழுத்திடவில்லை.

எனவே, ஓடிடி தளங்களை முறைப்படுத்துவதற்கான அமைப்பை நிறுவுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனு குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசு, மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சகம், இந்திய இணையதள மற்றும் அலைபேசி கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com