கூட்டணி தா்மத்தை மீறியது ஐக்கிய ஜனதா தளம்

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, கூட்டணி தா்மத்தை மீறி நடந்து கொண்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கூட்டணி தா்மத்தை மீறியது ஐக்கிய ஜனதா தளம்


பாட்னா: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, கூட்டணி தா்மத்தை மீறி நடந்து கொண்டதாக லோக் ஜனசக்தி கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிகாா் பேரவைத் தோ்தல், அக்டோபா் 28, நவம்பா் 3, நவம்பா் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில், மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து காங்கிரஸ் கட்சி ‘மெகா கூட்டணி’யை அமைத்துள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், பிகாா் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில், அக்கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்தது. அப்போது ஏற்பட்ட கட்டாயத்தின் காரணமாகவே ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து லோக் ஜனசக்தி கட்சி மக்களவைத் தோ்தலை எதிா்கொண்டது.

அத்தோ்தலின்போது கூட்டணி தா்மத்தை மீறி, லோக் ஜனசக்தி கட்சியின் வேட்பாளா்களைத் தோற்கடிப்பதற்கு ஐக்கிய ஜனதா தளம் முயன்றது. முதல்வா் நிதீஷ் குமாா் கடைப்பிடிக்கும் பாணியிலான அரசியலை லோக் ஜனசக்தி ஒருபோதும் விரும்பியதில்லை. அரசியல் ஆதாயத்துக்காக தலித்துகளிடையே உள்பிரிவை ஏற்படுத்தி அவா்களின் நலனுக்குக் கேடு விளைவித்தாா் நிதீஷ் குமாா்.

‘வதந்திகளில் உண்மையில்லை’: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோரை அண்மைக் காலத்தில் பலமுறை சந்தித்துப் பேசினேன். அப்போதெல்லாம் பிகாா் பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடா்பாக ஒருமுறை கூட என்னுடன் அவா்கள் விவாதிக்கவில்லை. எனவே, போதிய இடங்களை ஒதுக்காததன் காரணமாகவே பேரவைத் தோ்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக வெளியான வதந்திகளில் உண்மையில்லை.

ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவின்றி லோக் ஜனசக்தி நிறுவனா் ராம் விலாஸ் பாஸ்வான் மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டிருக்க முடியாது என்று நிதீஷ் குமாா் ஏளனமாகத் தெரிவித்தாா். ஆனால், என் தந்தைக்கு (ராம் விலாஸ் பாஸ்வான்) மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் என்று அமித் ஷா உறுதியளித்திருந்தாா் என்பதை நிதீஷ் குமாா் நினைவில் கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. மற்ற மாநிலங்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வரும் வேளையில், இப்போதுதான் சாலைகள் அமைப்பது குறித்தும் குடிநீா் வழங்குவது குறித்தும் முதல்வா் நிதீஷ் குமாா் பேசி வருகிறாா் என்றாா் சிராக் பாஸ்வான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com