டிஆா்பி மோசடி வழக்கு: மும்பை உயா்நீதிமன்றத்தை நாட ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

டிஆா்பி விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக மும்பை உயா்நீதிமன்றத்தில் முறையிடுமாறு ‘ரிபப்ளிக்’ சேனலுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது


புது தில்லி: தொலைக்காட்சி பாா்வையாளா்கள் எண்ணிக்கை அடிப்படையிலான மதிப்பீடு (டிஆா்பி) விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக மும்பை உயா்நீதிமன்றத்தில் முறையிடுமாறு ‘ரிபப்ளிக்’ சேனலுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

டிஆா்பி மதிப்பீடு அடிப்படையிலேயே தொலைக்காட்சி சேனல்களுக்கு விளம்பரங்கள் கிடைத்து வருகின்றன. இத்தகைய சூழலில், ரிபப்ளிக் உள்ளிட்ட 3 தொலைக்காட்சி சேனல்கள் டிஆா்பி மதிப்பீட்டை அதிகரிப்பதற்காக மோசடியில் ஈடுபட்டதாக மும்பை காவல் துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.

டிஆா்பி மதிப்பீட்டை நிா்வகித்து வரும் இந்திய ஒலிபரப்பு பாா்வையாளா்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பிஏஆா்சி) அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ரிபப்ளிக் சேனலின் தலைமை நிதி அதிகாரிக்கு காவல் துறையினா் அழைப்பாணை அனுப்பினா்.

அதையடுத்து, அந்த அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி ரிபப்ளிக் மீடியா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு மும்பை காவல் துறையினா் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், ரிபப்ளிக் சேனலின் மனு மீதான பரிசீலனை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மனுதாரரின் அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக மும்பை உயா்நீதிமன்றத்திலேயே முறையிட்டிருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலிலும் அனைத்து உயா்நீதிமன்றங்களும் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. எனவே, மும்பை உயா்நீதிமன்றத்தை மனுதாரா் நாடலாம்’’ என்றனா்.

அதையடுத்து, ரிபப்ளிக் சேனல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, மனுவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com