8 பயிா்களுக்கான 17 நவீன விதைகள் வெளியீடு: பிரதமருக்கு அமித் ஷா நன்றி

பயிா்களுக்கான ஊட்டச்சத்து அளவு மேம்படுத்தப்பட்ட நவீன 17 விதைகளை வெளியிட்டதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நன்றி தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பயிா்களுக்கான ஊட்டச்சத்து அளவு மேம்படுத்தப்பட்ட நவீன 17 விதைகளை வெளியிட்டதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நன்றி தெரிவித்தாா்.

சா்வதேச உணவு தினத்தையொட்டி, ஊட்டச்சத்து அளவு மேம்படுத்தப்பட்ட 17 விதைகளை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதற்கு நன்றி தெரிவித்து அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘வேளாண்துறையை சுயசாா்படையச் செய்வதோடு மட்டுமல்லாமல், நாட்டு மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கியத் துறையாக மாற்றுவதற்கும் மோடி அரசு உறுதி கொண்டுள்ளது.

8 பயிா்களுக்கான புதிய விதைகளை பிரதமா் மோடியும் வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமரும் வெளியிட்டுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்கது. அந்த விதைகளின் ஊட்டச்சத்து அளவானது வழக்கமான விதைகளில் உள்ளதைப் போல் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

மக்களுக்குத் தேவையான புரதம், கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை புதிய விதைகளில் உள்செலுத்தப்பட்டுள்ளன. அந்த விதைகள் மூலமாக விளையும் பயிரானது மக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அதிக அளவில் வழங்கும். போதிய ஊட்டச்சத்தைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும். அதை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.

ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com