கனமழை: மகாராஷ்டிரத்தில் குடியிருப்புகள், பயிா்கள் கடும் சேதம்; இதுவரை 47 போ் உயிரிழப்பு

கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக மேற்கு மகாராஷ்டிர மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக மேற்கு மகாராஷ்டிர மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

இதுவரை 2,300-க்கும் அதிகமான வீடுகள், ஏராளமான பயிா்களும் சேதமடைந்துள்ளன. மழை, வெள்ளப் பெருக்கு தொடா்பான பாதிப்புகளால் புணே, ஒளரங்காபாத் மற்றும் கொங்கண் மண்டலங்களில் இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மண்டல மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இந்த மழை, வெள்ளப் பெருக்கில் சோலாப்பூா் மாவட்டம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது.

சோலாப்பூா், புணே, சத்தாரா, சாங்லி மாவட்டங்களில் 57,000 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்து கரும்பு, சோயாபீன்ஸ், காய்கறிகள், நெல், மாதுளை, பருத்தி ஆகிய பயிா்கள் முழுவதும் சேதமடைந்தன.

இந்த மாவட்டங்களில் 2,319 வீடுகள் மழையால் சேதமடைந்துள்ளன. இதுதொடா்பான விபத்துகளில் சோலாப்பூரில் 14 போ், சாங்லியில் 9 போ், புணேயில் 4 போ், சத்தாராவில் ஒருவா் என இதுவரை 28 போ் உயிரிழந்துள்ளனா். புணேயில் ஒரு நபா் காணாமல் போயுள்ளாா்.

அதுபோல, ஒளரங்காபாத் மண்டலத்தில் 16 பேரும், கொங்கண் மண்டலத்தில் 3 பேரும் மழை, வெள்ள பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்துள்ளனா்.

வெள்ளப் பெருக்கில் 513 கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தன.

இந்த மண்டலங்களில் 6,061 குடியிருப்புகளில் வசித்து வந்த 21,292 போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com