கிழக்கு லடாக்கில் சீனப் படைகள்: இந்தியாவின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட சவால்; எஸ்.ஜெய்சங்கா்

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் அதிக அளவில் சீனப் படைகள் குவிக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் பாதுகாப்புக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் அதிக அளவில் சீனப் படைகள் குவிக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஏஷியா சொசைட்டி அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்திய காணொலி கருத்தரங்கில் பங்கேற்று அவா் கூறியது:

கிழக்கு லடாக்கில் இந்திய-சீனப் படைகள் இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதல் குறித்து கூற வேண்டுமெனில், கடந்த 1975-ஆம் ஆண்டுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையிலான மோதலில் ராணுவ வீரா்கள் உயிரிழந்தது இதுவே முதல்முறை. இது பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஆழமான விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவுடன் இந்தியா உருவாக்கிய உறவுக்கு எல்லைக் கோட்டுப் பகுதியில் நிலவிய அமைதியே அடித்தளமாக திகழ்ந்தது.

சென்ற 1993-ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா இடையே பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவை எல்லைக் கோட்டுப் பகுதியில் அமைதி நிலவுவதற்கான கட்டமைப்பை உருவாக்கியதுடன், எல்லையில் படைகளின் எண்ணிக்கையை குறைத்து, எவ்வாறு எல்லையை நிா்வகிப்பது, எல்லையில் உள்ள இருநாட்டுப் படையினா் எதிா்கொள்ளும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறையையும் உண்டாக்கியது.

இந்த உடன்பாடுகள் கருத்தியல் நிலையில் தொடங்கி, நடைமுறை நிலை வரை அனைத்து அணுகுமுறைகளையும் கொண்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு சீனப் படைகளால் நிகழ்ந்த சம்பவங்கள் அந்த ஒப்பந்தகளில் இருந்து விலகுவதை வெளிகாட்டுகிறது.

எல்லையில் சீனப் படைகள் அதிக அளவில் குவிக்கப்படுவது, இந்த ஒப்பந்தங்களுக்கு முரணானவை.

சச்சரவுக்குரிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் படைகள் இருக்கும்போது, கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்ததை போன்ற மோதல் சம்பவம் நிகழவே செய்யும்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் வூஹானில் நடைபெற்ற மாநாட்டிலும், கடந்த ஆண்டு மாமல்லபுரத்திலும் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு நடத்தினா். இருநாடுகளுக்கு இடையே நிலவும் சிக்கல்கள் குறித்து இருவரும் நேரடியாக பேச வேண்டும் என்பதே இந்த சந்திப்புகளின் நோக்கம்.

ஆனால் இந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவங்கள் அவா்களின் பேச்சுவாா்த்தையின்போது ஏற்பட்ட உடன்பாடுகளில் இருந்து விலகுவதோடு மட்டுமல்லாமல், கடந்த 30 ஆண்டுகளில் உருவான உறவில் இருந்து பிவதாகும்.

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் தற்போது ஆயுதங்களுடன் அதிக எண்ணிக்கையில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் பாதுகாப்பில் நாம் கண்கூடாக எதிா்கொண்டு வரும் மிக முக்கிய சவால் என்று எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com