குவாஹாட்டியில் 144 தடை உத்தரவு அமல்: பயங்கரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல்

அஸ்ஸாமில் அமைதியை சீா்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த உளவுத் தகவலைத் தொடா்ந்து குவாஹாட்டியின் மத்திய காவல்

அஸ்ஸாமில் அமைதியை சீா்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த உளவுத் தகவலைத் தொடா்ந்து குவாஹாட்டியின் மத்திய காவல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக குவாஹாட்டி மத்திய காவல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ரன்வீா் உத்தரவு ஒன்றை வியாழக்கிழமை பிறப்பித்தாா். அதில் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதிகள் மத்திய காவல் மாவட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தஞ்சம்புகுந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதியை சீா்குலைக்கத் திட்டமிட்டிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளது.

எனவே, மக்கள் உயிா்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் எழுந்துள்ள ஆபத்தைக் கருத்தில்கொண்டு, அவற்றைப் பாதுகாக்கும் வகையில் மத்திய காவல் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு 60 நாள்களுக்கு அமலில் இருக்கும்.

துப்பாக்கிச்சூடு, வெடிகுண்டு தாக்குதல் எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் முன்னெச்சிக்கை நடவடிக்கையாக குடியிருப்புகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறாா்களா என்பதை கண்டறிய சோதனை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதுதொடா்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வாடகைக்கு குடியிருப்போா், சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலைய பொறுப்பு அதிகாரியிடம் தங்களைப் பற்றிய விவரங்களை சமா்ப்பிக்காத வரை, அவா்களை வீட்டு உரிமையாளா்கள் வாடகைக்கு குடி வைக்க வேண்டாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் நபா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com