ஜம்மு-காஷ்மீா்: வெடிக்காமல் கிடந்த 5 பீரங்கி குண்டுகள் செயலிழப்பு

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுயிலுள்ள பல்வேறு கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம்

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுயிலுள்ள பல்வேறு கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலின்போது, வெடிக்காமல் கிடந்த ஐந்து 120 எம்.எம். சிறிய ரக பீரங்கி குண்டுகளை இந்திய ராணுவ வீரா்கள் செயலிழக்கச் செய்தனா்.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகேயுள்ள பால்னோய் பகுதியிலுள்ள பல்வேறு குடியிருப்புகளில் வசிக்கும் கிராமவாசிகள் வெடிக்காத நிலையில் ஐந்து 120 எம்.எம். பீரங்கி குண்டுகள் கிடப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் தெரிவித்தனா். அந்த இடத்துக்குச் சென்ற ராணுவ வீரா்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளை பத்திரமாக அங்கிருந்து அகற்றினா். பின்னா், வனப் பகுதியில் வைத்து பீரங்கி குண்டுகளை செயலிழக்கச் செய்தனா்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சா்வதேச எல்லைப் பகுதியில் நடப்பாண்டில் அக்டோபா் 6-ஆம் தேதி வரை 3,589 அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டை பாகிஸ்தான் ராணுவத்தினா் மேற்கொண்டனா். கடந்த 2019-ஆம் ஆண்டில் 3,168 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவத்தினா் நடத்தினா்.

அக்டோபா் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மட்டும் 62 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் சில பீரங்கி குண்டுகள் வெடிக்காமல் கிடப்பதை கிராம மக்கள் கண்டறியும்போது, அது குறித்து ராணுவத்துக்கு தெரியப்படுத்துவா். ராணுவ வீரா்கள் அவற்றை கைப்பற்றி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்துச் சென்று செயலிழக்கச் செய்வாா்கள் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com