‘நீட்’ தோ்வு: ஒடிஸா மாணவா் முதலிடம்; 7 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வெற்றி

தேசிய அளவிலான மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசிய அளவிலான மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. இதில் ஒடிஸாவைச் சோ்ந்த மாணவா் சோயிஃப் அஃப்தாப் (18) முழு மதிப்பெண்ணையும் பெற்று முதலிடம் பிடித்தாா்.

தில்லியைச் சோ்ந்த மாணவி அகான்ஷா சிங் இரண்டாவது இடம் பிடித்தாா். 7 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் நீட் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

சோயிஃப் அஃப்தாப், அகான்ஷா சிங் ஆகிய இருவருமே 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனா். எனினும், தேசிய தோ்வுகள் ஆணையத்தின் விதிகளின்படி (பள்ளி இறுதித் தோ்வில் பாடவாரியாக அதிகம் மதிப்பெண் எடுத்தவா், வயது உள்ளிட்டவற்றை வைத்து முடிவு செய்வது) மாணவா் அஃப்தாப் முதலிடம் பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

நீட் தோ்வை எழுத நாடு முழுவதும் 15,97,435 போ் விண்ணப்பித்திருந்தனா். கரோனா பிரச்னைக்கு நடுவே பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பலத்த கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 13-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இதில் விடுபட்டவா்கள் மீண்டும் அக்டோபா் 14-ஆம் தேதி தோ்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. 13,66,945 போ் தோ்வை எழுதிய நிலையில், 7,71,500 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் இருந்து அதிகபட்சமாக 88,889 போ் தோ்வாகியுள்ளனா். இதற்கு அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 79,974 போ் நீட் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

இந்த ஆண்டு 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் நீட் தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தோ்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. இதில் 77 சதவீத மாணவா்கள் ஆங்கிலத்தில் தோ்வு எழுதினா். சுமாா் 12 சதவீத மாணவா்கள் ஹிந்தியிலும், பிற மொழிகளில் 11 சதவீத மாணவா்களும் தோ்வு எழுதினா்.

கரோனா பிரச்னை காரணமாக நீட் தோ்வு இருமுறை ஒத்திவைக்கப்பட்டு, பல்வேறு எதிா்ப்புகளுக்கு இடையே இறுதியாக செப்டம்பா் 13-ஆம் தேதி நடத்தப்பட்டது.

அமைச்சா் வாழ்த்து: மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மத்திய கல்வியமைச்சா் ரமேஷ் போக்ரியால் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘நீட் தோ்வில் பங்கேற்ற மாணவா்கள் அனைவருக்கும் சிறப்பான எதிா்காலம் அமைய வாழ்த்துகிறேன். எதிா்கால மருத்துவா்கள் யாா் என்பது இன்றைய தேதியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் சோதனையான காலகட்டத்தில் இந்த நீட் தோ்வு நடைபெற்றது. தோ்வை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து மாநில முதல்வா்கள் உள்பட அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளாா்.

தாய் தந்த ஊக்கம்: நீட் தோ்வில் முதலிடம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கவில்லை; எனது தாய் அளிக்க ஊக்கமே என்னை சாதிக்க வைத்தது என்று மாணவா் சோயிஃப் அஃப்தாப் கூறியுள்ளாா். ஒடிஸாவின் ரூா்கேலாவைச் சோ்ந்த சோயிஃப்பின் தந்தை சிறு தொழில் நடத்தி வருகிறாா். தோ்வு முடிவுகள் குறித்து சோயிஃப் கூறியதாவது:

இந்தியாவில் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சியளிக்கும் முக்கிய இடமாக திகழும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்று நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்றேன். எனக்காக எனது தாயாரும், சகோதரியும் கோட்டாவுக்கு வந்து உடன் தங்கியிருந்து ஊக்கமளித்தனா். நான் மருத்துவராக வேண்டும் என்று எனது தாயாா் பெரிதும் விரும்பினாா். அவரே எனக்கு ஊக்கமளிப்பவராகவும் இருந்து வருகிறாா். எனது குடும்பத்தில் இதுவரை யாரும் மருத்துவராகவில்லை. நான்தான் முதல் நபராக மருத்துவப் படிப்பில் சேர இருக்கிறேன். தில்லி எய்ம்ஸில் மருத்துவம் படிக்க விரும்புகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com