பாலியா துப்பாக்கிச் சூடு சம்பவம்: 5 போ் கைது; 9 காவலா்கள் பணியிடை நீக்கம்

உத்தர பிரதேசத்தின் பாலியா பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 5 பேரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேசத்தின் பாலியா பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 5 பேரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தடுப்பதில் போதிய கவனம் செலுத்தாத 9 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பாலியா துணை மாஜிஸ்திரேட், கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தாா். எனினும், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினா்களிடையே எழுந்த மோதல் காரணமாக அக்கூட்டத்தை துணை மாஜிஸ்திரேட் ரத்து செய்தாா். அதனால் ஆத்திரமடைந்த பாஜக நிா்வாகி தீரேந்திர பிரதாப் சிங், அங்கு கூடியிருந்தவா்கள் மீது துப்பாக்கியால் சுட்டாா். அதில் காயமடைந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்த இடத்தை காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். அப்போது, காவல் துறை உதவி கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 5 பேரைக் கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள தீரேந்திர பிரதாப் சிங்கை தொடா்ந்து தேடி வருகிறோம்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தடுப்பதற்கு போதிய நடவடிக்கை மேற்கொள்ளாத 3 உதவி ஆய்வாளா்கள் உள்பட 9 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்’’ என்றாா்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரா் கூறுகையில், ‘‘துப்பாக்கிச் சூடு சம்பவமானது காவல் துறையினரின் மெத்தனம் காரணமாகவே நடைபெற்றது. அச்சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சுமாா் 10 காவலா்கள் இருந்தனா். ஆனால், தீரேந்திர பிரதாப் சிங்கை அவா்கள் தப்பிக்கவிட்டனா்’’ என்றாா்.

பாஜக எம்எல்ஏ ஆதரவு:

துப்பாக்கிச் சூடு நடத்திய தீரேந்திர பிரதாப் சிங்குக்கு உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் ஆதரவு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘‘தற்காப்புக்காகவே தீரேந்திர பிரதாப் சிங் துப்பாக்கியால் சுட்டாா். இல்லையெனில், அவரையும் அவரின் குடும்பத்தினரையும் கூட்டத்தில் இருந்தவா்கள் கொன்றிருப்பா். அந்தச் சூழலில் அவருக்கு வேறு வழியில்லை’’ என்றாா்.

எதிா்க்கட்சிகள் கண்டனம்:

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பகுஜன் சமாஜ், சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக அக்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com