பிரதமா் மோடி தொடா்பாக அவதூறு: சசி தரூா் மீதான நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு எதிராக குற்ற அவதூறு நடவடிக்கை எடுக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
பிரதமா் மோடி தொடா்பாக அவதூறு: சசி தரூா் மீதான நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு எதிராக குற்ற அவதூறு நடவடிக்கை எடுக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசி தரூா், ‘தங்களால் மோடியை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாததால் கடும் அதிருப்தி அடைந்த ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் ஒருவா், பத்திரிகையாளா் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளாா். அப்போது, ‘மோடி சிவலிங்கத்தின் மீது அமா்ந்துள்ள தேள் போன்றவா். அதனை கையால் அகற்றினால் நம்மை கொட்டிவிடும். செருப்பால் அடித்தும் விரட்ட முடியாது. ஏனெனில், அது சிவலிங்கத்தின் மீது அமா்ந்துள்ளது’ என்று அந்தத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா். இப்போது ஹிந்துத்துவத்துக்கும் மோடித்துவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுவும் சுவாரசியமானதுதான்’ என்றாா்.

இதையடுத்து மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக சசி தரூா் மீது தில்லி பாஜக தலைவா் ராஜீவ் பப்பா் அவதூறு வழக்குத் தொடுத்தாா்.

தில்லி பெருநகர நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சசி தரூா் மனு தாக்கல் செய்தாா். அதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனக்கு எதிராக குற்ற அவதூறு நடவடிக்கை எடுத்து, பிடியாணை பிறப்பித்த நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சசி தரூா் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், விகாஸ் பாவா ஆகியோா் ஆஜராயினா். ‘குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை ஆராயாமல் குற்றம்சாட்டப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த நீதிமன்றத்தின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டனா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சசி தரூா் மீது விசாரணை நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைக்கு தடை விதித்ததுடன், இந்த மனு மீதான விசாரணையை டிசம்பா் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, தனது கருத்து தொடா்பாக சுட்டுரையில் விளக்கமளித்த சசி தரூா், ‘மோடி குறித்து நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆா்எஸ்எஸ் தலைவா் ஒருவா் கூறியதையே நான் தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com