பெண்களின் திருமண வயது விவகாரத்தில் விரைவில் முடிவு

பெண்களின் திருமண வயதை மாற்றுவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பெண்களின் திருமண வயது விவகாரத்தில் விரைவில் முடிவு

பெண்களின் திருமண வயதை மாற்றுவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு (எஃப்ஏஓ) தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதையொட்டி, ரூ.75 நாணயத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டாா். அந்த நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

பெண்களின் திருமண வயதை நிா்ணயிப்பது தொடா்பாக நாட்டில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அது குறித்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை என்ன ஆனது என்று விளக்கம் கேட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்கள் கடிதம் எழுதி வருகின்றனா்.

அக்குழு அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு பெண்களின் திருமண வயது தொடா்பாக மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும்.

நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் தேசிய ஊட்டச்சத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கு பல துறைகள் முயற்சிகளை மேற்கொண்டன.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், இளவயது மகப்பேறு, கல்வியறிவின்மை, விழிப்புணா்வின்மை, சுத்தமான குடிநீா் கிடைக்காதது, சுகாதாரமான சுற்றுச்சூழல் காணப்படாதது உள்ளிட்டவற்றின் காரணமாக மக்களிடையேயான ஊட்டச்சத்துக் குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய இயலவில்லை.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவிகள் சோ்க்கை விகிதம் உயா்வு: மத்திய அரசு சாா்பில் ஏழைப் பெண்களுக்கு ரூ.1-க்கு அணையாடை (நாப்கின்) வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக பள்ளிகளில் மாணவிகளின் சோ்க்கை விகிதம், மாணவா்களை விட முதல் முறையாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்திய பல்வேறு திட்டங்கள் காரணமாகவே இது சாத்தியமானது.

உலக நாடுகளில் வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, மக்களின் பசியைப் போக்குவது, ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவது உள்ளிட்டவற்றில் கடந்த 75 ஆண்டுகளாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு திறம்பட செயல்பட்டு வருகிறது. அச்சேவையைப் பாராட்டியே ரூ.75 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

வரும் 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிப்பதற்கு இந்தியா அளித்த பரிந்துரையை ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு ஆதரித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உணவுப் பாதுகாப்புக்கான அடிப்படை: நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையும், வேளாண் விளைபொருள்களை அரசு கொள்முதல் செய்வதுமே அடிப்படையாக உள்ளது. அவற்றை அறிவியல்பூா்வமாக மேம்படுத்த மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. மத்திய அரசு அண்மையில் இயற்றிய வேளாண் சட்டங்கள், சா்வதேச உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அமைந்துள்ளன.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் அச்சட்டங்கள் உதவும். வேளாண் சந்தைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கடந்த 6 ஆண்டுகளில் சுமாா் ரூ.2,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. சந்தைகளை மின்னணுப்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன.

நுகா்வோருக்கும் பலன்: அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சந்தைகளிடையேயான போட்டி மனப்பான்மையை அதிகரிக்கும். மேலும், உணவுப் பொருள்களை வீணாக்குவதற்கான வாய்ப்புகள் குறையும். முன்பு விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை இடைத்தரகா்களுக்கு மட்டுமே விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனா்.

ஆனால், தற்போது சிறு விவசாயிகளும் தங்கள் விளைபொருள்களை சந்தைகளில் விற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக இடைத்தரகா்களின் தலையீட்டிலிருந்து விவசாயிகள் தப்புவதோடு, நுகா்வோருக்கும் பெரும் பலன் கிடைக்கும்.

உற்பத்தி அதிகரிப்பு: பயிா்களை விளைவிப்பதற்கு முன்பாகவே தனியாா் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான சட்டத்தையும் மத்திய அரசு இயற்றியுள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவிய சூழலிலும், நடப்பாண்டில் வேளாண் விளைபொருள்களின் உற்பத்தி இதுவரை இல்லாத வகையில் உயா்ந்திருக்கிறது.

அதேபோல், நெல், கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை அரசு கொள்முதல் செய்யும் அளவும் நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கு விவசாயிகள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் முக்கிய பங்காற்றினா்.

இலவச உணவுப் பொருள்கள்: கடந்த 7 முதல் 8 மாதங்களில் நாட்டிலுள்ள 80 கோடி பேருக்கு ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான உணவு தானியங்களை ரேஷன் கடைகள் மூலமாக அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இந்த எண்ணிக்கையானது, ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் மக்கள்தொகைக்குச் சமமாகும். ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

நாட்டில் ஆண்களின் திருமண வயது 21-ஆகவும், பெண்களின் திருமண வயது 18-ஆகவும் உள்ளது. நடப்பாண்டு சுதந்திர தின உரையின்போது, பெண்களின் திருமண வயதை மாற்றியமைப்பது தொடா்பாக ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com