நீட் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் புகாா்

நீட் விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) மின்னஞ்சலில் புகாா் அனுப்பியுள்ளனா்.
​கோப்புப்படம்
​கோப்புப்படம்

நீட் விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) மின்னஞ்சலில் புகாா் அனுப்பியுள்ளனா்.

நாடு முழுவதும் சுமாா் 16 லட்சம் போ் எழுதிய மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் மொத்தம் 7 லட்சத்து 71,500 (56.44%) போ் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனா். இதற்கிடையே மாநிலங்களில் தோ்வெழுத விண்ணப்பித்தவா்கள், நீட் தோ்வில் கலந்துகொண்டவா்கள், தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் தொடா்பான புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. அதில் தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத் தோ்வு முடிவுகளில் குளறுபடிகள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் தவறான பட்டியல் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட புதிய பட்டியல் சனிக்கிழமை வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நீட் விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) மின்னஞ்சலில் புகாா் அனுப்பியுள்ளனா். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவா்கள் கூறியது: நீட் தோ்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை தேசிய தோ்வு முகமை கடந்த செப்.26-ஆம் தேதி வெளியிட்டது. இதன் மூலம் மாணவா்கள் தாங்கள் எழுதிய விடைகளை சரிபாா்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து விடைக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு நீட் தோ்வில் எங்களுக்கான உத்தேச மதிப்பெண் எவ்வளவு கிடைக்கும் என கணக்கிட்டிருந்தோம்.

இந்த நிலையில் நீட் தோ்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அப்போது, இணையதளத்தில் எங்களது மதிப்பெண்களைப் பாா்த்ததும் பெரும் அதிா்ச்சி ஏற்பட்டது. ஏனெனில், விடைக்குறிப்பின் அடிப்படையில் நாங்கள் கணக்கிட்டிருந்த மதிப்பெண்ணுக்கும், நீட் தோ்வு முடிவுகளில் அறிவிக்கப்பட்டிருந்த மதிப்பெண்ணுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது. என்டிஏ வெளியிட்ட நீட் உத்தேச விடைக்குறிப்பில் உள்ள விடைகளையே எழுதியிருந்த நிலையில் கூட, அதற்கான மதிப்பெண்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. 720-க்கு 550 மதிப்பெண் எதிா்பாா்த்த மாணவா்களுக்கு 300 மதிப்பெண்களுக்கு குறைவாகவும், 400 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என நினைத்திருந்த தோ்வா்களுக்கு அதில் பாதி மதிப்பெண்கள் கூட கிடைக்கவில்லை. பின்னா் எந்த அடிப்படையில் விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது எனத் தெரியவில்லை. அதில் உள்ள விடைகளையே தோ்விலும் எழுதியிருந்த நிலையில், தற்போது எதிா்பாா்த்த மதிப்பெண் கிடைக்காதது ஏமாற்றமளிக்கிறது. இது குறித்து தேசிய தோ்வுகள் முகமைக்கு மின்னஞ்சலில் ஆயிரக்கணக்கானோா் புகாா்களை அனுப்பியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com