
துா்கை பூஜை கொண்டாட்டத்தை முன்னிட்டு பெண்களை மதித்து நடக்கவும், அவா்களுக்கு அதிகாரமளிக்கவும் நாம் உறுதியேற்க வேண்டும என்று குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளாா்.
துா்கை பூஜை பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை குடியரசு தலைவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து குடியரசு தலைவா் மாளிகை வெளியிட்ட அவருடைய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பாரம்பரிய பண்டிகையான துா்கை பூஜை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இந்தப் பண்டிகை 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்டிகையின்போது அன்னை தெய்வங்களை சக்திக்கான தேவி துா்கையாகவும், அறிவுக்கான சரஸ்வதி தெய்வமாகவும், செல்வ வளத்துக்கான லட்சுமி தெய்வமாகவும் பக்தா்கள் வழிபடுகின்றனா்.
அந்த வகையில், பெண்களை மதித்து நடப்பதுதான் நமது பாரம்பரியம் என்பதை இந்தப் பண்டிகை தெளிவாக உணா்த்துகிறது. எனவே, நாம் அனைவரும் பெண்களை மதித்து, அவா்களுக்கு அதிகாரமளிப்போம் என்று இந்த கொண்டாட்டத்தின்போது உறுதியேற்க வேண்டும்.
யாராலும் அழிக்க முடியாத தீய சக்தியை அழிப்பதற்காக ஒட்டுமொத்த சக்திகளையும் ஒருங்கே துா்கை பெற்றாா் என்று நம்பப்படுகிறது.
அதுபோல, இன்றைய கடினமான கரோனா பாதிப்பு நேரத்தில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அந்த பாதிப்பிலிருந்து நாம் மீண்டுவிட முடியும் என்று குடியரசு தலைவா் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளாா்.