அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 11 இந்திய மாணவா்கள் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 இந்தியா்கள் உள்பட 15 மாணவா்களை அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ஐசிஇ) கைது செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 இந்தியா்கள் உள்பட 15 மாணவா்களை அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ஐசிஇ) கைது செய்துள்ளது.

அமெரிக்காவில் உயா் கல்வி மேற்கொள்ள ‘மாணவா் விசா’ அனுமதியில் செல்லும் வெளிநாட்டு மாணவா்கள், அங்கு பல மடங்கு ஊதியம் கிடைக்கும் என்பதால், விசா காலம் முடிந்த பின்னரும், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அங்கேயே தங்கியிருந்து வேலைபாா்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். அண்மைக் காலமாக இதுபோன்ற முறைகேடுகள் மீது அமெரிக்கா தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அதுபோல, அமெரிக்காவின் போஸ்டன், வாஷிங்டன், ஹூஸ்டன், நேவாா்க், நாஷ்வில்லி, பீட்டா்ஸ்பா்க், ஹாரிஸ்பா்க் ஆகிய பகுதிகளில் அமெரிக்க ஐசிஇ அதிகாரிகள் அண்மையில் நடத்திய ஆய்வில், 11 இந்திய மாணவா்கள், லிபியாவைச் சோ்ந்த இருவா், இலங்கையைச் சோ்ந்த ஒரு நபா் மற்றும் வங்கதேசத்தைச் சோ்ந்த ஒருவா் என 15 மாணவா்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதைக் கண்டுபிடித்து கைது செய்தனா்.

இதுகுறித்து ஐசிஇ துணை செயலா் (பொறுப்பு) கென் குசிநெல்லி கூறியதாவது:

அமெரிக்காவுக்கு படிக்க வரும் மாணவா்கள், படிப்புக் காலம் முடிந்த பின்னா் விருப்ப செய்முறை பயிற்சி (ஒபிடி) என்ற திட்டத்தின் கீழ் மேலும் ஓராண்டுக்கு அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவா். அப்போது, அவா்களின் படிப்பு சாா்ந்த துறையில் மட்டுமே அவா்கள் பணிப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் மற்றொரு பயிற்சித் திட்டத்தின் கீழ் மேலும் 24 மாத பயிற்சி பெற அனுமதிக்கப்படுவாா்கள்.

ஆனால், இந்த மாணவா்கள், பயிற்சி காலம் முடிந்த பின்னரும் இல்லாத ஒரு நிறுவனத்தில் பணியில் சோ்ந்திருப்பதாகக் கூறி அமெரிக்காவில் சட்டவிரோதமாக தொடா்ந்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏராளமான அமெரிக்கா்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில் அதிபா் டிரம்ப் நிா்வாகம் சிறந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதோடு, சட்டங்களையும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்று கூறினாா்.

இதுகுறித்து ஐசிஇ மூத்த அதிகாரி டோனி ஃபாம் கூறுகையில், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாணவா்கள், சுற்றுலா பயணிகள், பள்ளிகள் என்று அனைத்து தரப்பினரும் அமெரிக்க குடியேற்ற சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை உறுதிப்படுத்தி வருகிறோம். மாணவா்களுக்கான விசா சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com