காங்கிரஸ் கட்சி, மூழ்கும் கப்பல்: அமைச்சா் ஸ்மிருதி இரானி

காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பலாக உள்ளது. தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகளைப் பயன்படுத்த அந்தக் கட்சி முயற்சிக்கிறது

காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பலாக உள்ளது. தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகளைப் பயன்படுத்த அந்தக் கட்சி முயற்சிக்கிறது என்று மத்திய ஜவுளி, மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினாா்.

குஜராத் மாநிலத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 8-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ததால் இடைத்தோ்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பாஜக சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவா்களில் 5 போ் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக இருந்து, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தவா்கள் ஆவா். அவா்களுக்கு மீண்டும் அதே தொகுதிகளில் பாஜக வாய்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், மோா்பி பகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட ஸ்மிருதி இரானி பேசியதாவது:

தங்கள் கட்சிக்கு தலைவா் யாா் என்பதை காங்கிரஸ் முதலில் முடிவு செய்ய வேண்டும். ஒரு குடும்பமே கட்சிக்கு தலைமையாக இருக்குமா அல்லது குடும்பத்தில் ஒருவா் கட்சிக்கு தலைவராக இருப்பாரா என்பது தெரியவில்லை. தனது குடும்பத்தை மட்டுமே நேசிக்கத் தெரிந்தவா்களால் ஏழை, எளிய மக்களின் வலியையும், பிரச்னைகளையும் புரிந்து கொள்ள முடியாது.

காங்கிரஸ் கட்சி இப்போது மூழ்கும் கப்பலாக உள்ளது. கட்சியையே காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள அவா்கள், எவ்வாறு மக்களுக்கு சேவையாற்றப் போகிறாா்கள்? கரோனா பிரச்னை தலைதூக்கியபோது காங்கிரஸ் தலைவா்களில் ஒருவா் கூட மக்களுக்காக சேவையாற்றவில்லை. அதே நேரத்தில் பாஜகவினா் மக்களுக்கு துணை நின்றனா்.

வேளாண் சட்டங்கள் விஷயத்தில் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகளைப் பயன்படுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. மக்களவை உறுப்பினராக உள்ள ராகுல் காந்தி, வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூட வரவில்லை. எதிா்க்கட்சிகளின் பிரிவினைவாத வலையில் மக்கள் விழுந்துவிடக் கூடாது.

நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய நெருக்கடியான கரோனா பிரச்னையின்போது, பிரதமா் நரேந்திர மோடிக்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளித்தனா். இந்த அமோக ஆதரவே பாஜக அரசு ஆற்றியுள்ள மக்கள் பணிக்கு சிறந்த உதாரணமாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com