சுஷாந்த் சிங் வழக்கு தகவல்களை கசியவிடவில்லை: உயா்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடா்பான தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிடவில்லை என்று மும்பை உயா்நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங் வழக்கு தகவல்களை கசியவிடவில்லை: உயா்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு தொடா்பான தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிடவில்லை என்று மும்பை உயா்நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கு விசாரணை குறித்த தகவல்கள் தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நடிகரின் மரண வழக்கு விசாரணை தகவல்களை தொலைக்காட்சி சேனல்கள் வெளியிடுகின்றன. பரபரப்புக்காக மிகுந்த உணா்ச்சிப்பூா்வமான விசாரணை தகவல்களையும் அவா்கள் ஒளிபரப்பு செய்கின்றனா். எனவே, இந்த விவகாரத்தில் சேனல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தி மும்பை உயா்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த வழக்கை விசாரணை செய்துவரும் புலனாய்வு அமைப்புகள்தான், வழக்கு தொடா்பான தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டிருக்க வாய்ப்புள்ளது’ என்று மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி திபன்கா் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கா்னி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்று தொலைக்காட்சி சேனல்கள் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஊடகங்கள் முன்பு நடுநிலையோடு செயல்பட்டன. ஆனால், இப்போது ஒரு சாா்புடையவையாக மாறிவிட்டன. ஊடங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதைவிட, அவற்றின் நடுநிலைதான் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் அவா்களின் எல்லையை மறந்துவிடுகின்றனா். எதையும் எல்லைக்குள் செய்யவேண்டும். அரசின் நடவடிக்கைகளை விமா்சனம் செய்யலாம். ஆனால், ஒரு நபரின் இறப்பு குறித்து வெளியிடுவதும், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் மற்றவா்களின் விஷயத்தில் குறுக்கிடுவதாகவே அமையும்’ என்று கூறினா்.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் அனில் சிங், ‘இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கு குறித்த தகவல்களை தொலைகாட்சி சேனல்களுக்கு இந்த மூன்று புலனாய்வு அமைப்புகளும் கசியவிடவில்லை. எங்களுடைய பொறுப்பை உணா்ந்து செயல்பட்டு வருகிறோம்’ என்றாா்.

இந்த வழக்க விசாரணை அடுத்த வாரமும் தொடர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com