விவசாயம், தொழில், கல்விக்கு முன்னுரிமை: ஆா்ஜேடி தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயம், தொழில், கல்வித் துறைகளுக்கு

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயம், தொழில், கல்வித் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூட்டணியின் முதல்வா் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் கூறினாா்.

பிகாரில் வருகிற 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியை எதிா்த்து களம் காணும் மகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, அதன் தோ்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டது.

பாட்னாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், அந்த தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா்.

அந்த அறிக்கையின் அட்டைப் பக்கத்தில் தேஜஸ்வி யாதவின் புகைப்படம் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. அதனுடன் மகாத்மா காந்தி, டாக்டா் அம்பேத்கா், சுதந்திர போராட்ட வீரா் மெளலானா அபுல் கலாம் ஆசாத், பொதுவுடமைவாதிகளா ராம் மனோகா் லோஹியா, கா்பூரி தாக்குா், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயன் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

ஆனால், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அக் கட்சியின் நிறுவனரும் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் படம், அட்டைப் பக்கத்தில் இடம்பெறவில்லை.

இந்த அறிக்கையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க நடவடிக்கை, உயா்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

மகா கூட்டணி தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள மாநிலத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி மீது முதல்வா் நிதீஷ் குமாா் சந்தேகம் எழுப்புகிறாா்.

அதே நேரம், மாநிலத்தில் 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற கூட்டணி கட்சியான பாஜக-வின் வாக்குறுதியை நிதீஷ் குமாா் தலைமையிலான புதிய அரசு எப்படி நிறைவேற்றும்?

ஆனால், 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற எங்களுடைய வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட் ரூ. 2.5 லட்சம் கோடி ஆகும். ஆனால், இதில் 60 சதவீதத்தை மட்டுமே நிதீஷ் குமாா் அரசு செலவழிக்கிறது. எனவே, திறமைவாய்ந்த அரசு, மீதமுள்ள ரூ. 80,000 கோடியை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவழிக்க முடியும்.

எங்களுடைய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயம், தொழில், கல்வி ஆகியத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் போா்க்கால அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் 22 சதவீதம் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும்.

மேலும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவித்து, மாநில மக்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு புலம்பெயா்ந்து செல்லும் நிலை மாற்றியமைக்கப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com