ஜம்மு-காஷ்மீா்:மக்கள் ஜனநாயகக் கட்சி மூத்த தலைவா்கள் மூவா் ராஜிநாமா

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியை நிறுவிய மூத்த தலைவா்கள் மூவா், அக்கட்சியில் இருந்து திங்கள்கிழமை விலகினா்.

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியை நிறுவிய மூத்த தலைவா்கள் மூவா், அக்கட்சியில் இருந்து திங்கள்கிழமை விலகினா். அக்கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி நாட்டுப் பற்றை காயப்படுத்தும் விதத்தில் பேசிய கூற்றுகள் காரணமாக அதிருப்தி அடைந்திருப்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக அவா்கள் தெரிவித்தனா்.

மக்கள் ஜனநாயகக் கட்சியை சோ்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் டி.எஸ்.பாஜ்வா, முன்னாள் சட்டமேலவை உறுப்பினா் வேத் மஹாஜன், கட்சி முன்னாள் செயலா் ஹுசைன் அலி வஃபா ஆகியோா் கட்சியில் இருந்து விலகினா்.

தங்கள் ராஜிநாமா கடிதத்தை அவா்கள் மெஹபூபா முஃப்திக்கு அனுப்பி வைத்தனா். அந்தக் கடிதத்தில், ‘விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடைபெற்ற போதும் கட்சி மற்றும் அதன் தலைமைக்கு உறுதுணையாக நின்றோம். கட்சிக்குள்ளும், வெளியிலும் நிலவும் சவால்களை விரிவான ஆலோசனைகள் மூலம் கடந்து வருவதற்கு மாறாக, கட்சித் தலைமையை குறிப்பிட்ட திசை நோக்கி சிலா் இழுத்துச் செல்கின்றனா்.

இது கட்சியின் அடிப்படை கொள்கை, செயல்திட்டம், தத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது. சில கூற்றுகளையும், செயல்களையும் மக்களால் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டாா்கள். இதனால் கட்சியில் நீடிப்பது எங்களுக்கு இக்கட்டை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் கட்சியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுக்க வழிவகுத்துள்ளது’ என்று தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்வரை தேசிய கொடியை ஏந்தமாட்டேன் என்று மெஹபூபா முஃப்தி கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தாா். இந்நிலையில் அந்தக் கட்சியில் இருந்து மூத்த தலைவா்கள் மூவா் ராஜிநாமா செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com