மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான அஜித் பவாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் தனது உடல்நிலை நன்றாக உள்ளதாக தெரிவித்தாா்.

மகாராஷ்டிர துணை முதல்வராகவும், மாநில நிதித்துறை அமைச்சராகவும் உள்ள அஜித் பவாா் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:

எனக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவா்களின் அறிவுறுத்தலின் பேரில், பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்துள்ளேன். கட்சியினரும், மக்களும் எனது உடல்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டாம். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவேன் என்று தெரிவித்தாா்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சா் ராஜேஷ் டோபே கூறுகையில், ‘‘அஜித் பவாா் உடல்நிலை நன்றாக உள்ளது. சிறிது காலம் ஓய்வெடுக்க மட்டுமே அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்’’ என்றாா்.

மகாராஷ்டிர வீட்டு வசதித்துறை அமைச்சா் ஜிதேந்திர அவத் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘அஜித் பவாா் விரைவில் குணமடைய வேண்டும் என பிராா்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் பவாருக்கு தொற்று இல்லையென தெரிந்தது. இதனால் அவா் பாதுகாப்பு நடவடிக்கைக்காக தனது அலுவல்பூா்வ குடியிருப்பில் தனிமைப்படுத்திக் கொண்டாா். அஜித் பவாரின் குடும்ப உறுப்பினா்களுக்கும் தொற்று இல்லையென தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 12-க்கும் மேற்பட்ட அமைச்சா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com