புதிய கவலை: நவராத்திரிக்குப் பின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா

இந்தியாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஒரு நாள் கரோனா பாதிப்பு குறைந்த அளவில் பதிவானாலும், மேற்கு வங்கம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
புதிய கவலை: நவராத்திரிக்குப் பின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா
புதிய கவலை: நவராத்திரிக்குப் பின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா


புது தில்லி: இந்தியாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஒரு நாள் கரோனா பாதிப்பு குறைந்த அளவில் பதிவானாலும், மேற்கு வங்கம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

துர்கா பூஜை, தசரா, நவராத்திரிப் பண்டிகைகளுக்குப் பிறகு, அதிகக் கொண்டாட்டங்களைக் கொண்ட மாநிலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், உண்மையிலேயே இந்தப் பண்டிகைகளின் காரணமாக கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருந்தால், அது இன்னும் இரண்டு வாரங்களில் தெரியவரும் என்கிறார்கள்.

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், பண்டிகை நாள்களைத் தொடர்ந்து கேரளம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் தில்லியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒருநாள் கரோனா பாதிப்பில் 58 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தில்லி, சட்டீஸ்கர், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், பலி எண்ணிக்கையில் 58 சதவீதம் அதாவது 488 உயிரிழப்புகள் இதே மாநிலங்களைச் சேர்ந்தவை என்றும் கூறப்பட்டுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சிறப்புக் குழுக்களில் சில, அவர்களுக்கு ஒதுக்கிய பணிகளை முடித்துவிட்டு முழு விவரங்களோடு திரும்பியுள்ளன. அதன் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம். புதிய விதிமுறைகளை உருவாக்கி அதனை செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.

நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் இது பற்றி கூறுகையில், நாட்டில் அதிர்ஷ்டவசமாக ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து கரோனா நோயாளிகளின் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. இதர நாடுகளில் கரோனா பாதிப்பின் இரண்டாவது அலை வீசி வருகிறது. அது முதல் அலையை விட மிக மோசமாக உள்ளது. ஆனால், அவ்வாறு இந்தியாவில் நிகழவில்லை. எனவே, தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும் என்கிறார்.

தொடர்ந்து பண்டிகைக் காலமாக இருக்கிறது. கடந்த ஒரு சில நாள்களாக நாம் செய்த தவறுகளால் ஏற்பட்ட தாக்கம் அடுத்த 10 முதல் 12 நாள்களுக்குத் தெரியும். எனவே, பரிசோதனை, கரோனா நோயாளிகளைக் கண்டறிதல், தொடர் சிகிச்சை போன்றவற்றை தற்போதிருக்கும் நிலையிலேயே தொடர வேண்டும்.

அதோடு, கரோனா பரிசோதனைகளின் ஒருநாள் சராசரி 11 லட்சமாகவே இருக்கும் நிலையில், செவ்வாயன்று 36 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை குறைக்கப்படாமல் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது நேர்மறையான விஷயமாகவே உள்ளது. 

அதேவேளையில், உலகிலேயே கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் இந்தியாவில்தான் மிக அதிகமாக உள்ளது. ஆனால் இதை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், இப்போதுதான் தீவிரமாக செயல்பட வேண்டும். சற்று ஓய்வு எடுத்தாலும், பரிசோதனையைக் குறைத்தாலும் எதிர்விளைவு ஏற்பட்டுவிடும். கேரளம், மேற்கு வங்கம், தில்லி மாநிலங்களில் கரோனா பரவல் மூன்றாவது முறையாக தீவிரமாகி வருகிறது என்றும் பால் கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com