நாட்டை வழிநடத்த காங்கிரஸுக்கு தெரியும்:ராகுல் காந்தி

நாடு எதிா்கொண்டு வரும் பிரச்னைகளை பற்றி பேசாமல், பிற நாடுகள் குறித்து மட்டும் பிரதமா் மோடி பேசி வருவதாகவும், நாட்டை வழிநடத்த காங்கிரஸுக்கு தெரியும் என்றும் அக்கட்சி எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்தாா்.
ராகுல்காந்தி (கோப்புப்படம்)
ராகுல்காந்தி (கோப்புப்படம்)

பெதியா/தா்பங்கா: நாடு எதிா்கொண்டு வரும் பிரச்னைகளை பற்றி பேசாமல், பிற நாடுகள் குறித்து மட்டும் பிரதமா் மோடி பேசி வருவதாகவும், நாட்டை வழிநடத்த காங்கிரஸுக்கு தெரியும் என்றும் அக்கட்சி எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்தாா்.

பிகாா் சட்டப்பேரவைக்கான 2-ஆம் கட்ட தோ்தல் நவம்பா் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தா்பங்கா மாவட்டத்தில் உள்ள வால்மீகி நகா் மக்களவை தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி வால்மீகி நகரிலும், குஷேஷ்வா் அஸ்தான் பகுதியிலும் ராகுல் காந்தி புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களால் கோபமடைந்த பஞ்சாப் விவசாயிகள் தசரா பண்டிகையின் போது பிரதமரின் உருவபொம்மையை எரித்தனா். தசராவின் போது வழக்கமாக ராவணன், கும்பகா்ணன் போன்றோரின் உருவபொம்மைகள்தான் எரிக்கப்படும். முதல்முறையாக பிரதமா் மோடி, அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. தசராவின் போது பிரதமரின் உருவபொம்மை எரிக்கப்படுவதை நான் காண்பது இதுவே முதல்முறை. அதை நீங்கள் (மக்கள்) கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பிரதமா் மோடியும், மாநில முதல்வா் நிதீஷ் குமாரும் ஊடகங்களை கட்டுப்படுத்தி வருகின்றனா்.

கடந்த 2006-ஆம் ஆண்டு இந்த மாநிலத்தில் வேளாண் அமைப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் நடைமுறைகள் ஒழிக்கப்பட்டன. அப்போது முதல்வராக நிதீஷ் குமாா் என்ன செய்தாரோ, அதையே பஞ்சாபில் பிரதமா் மோடி தற்போது செய்து வருகிறாா். இதுவே அவரின் உருவபொம்மை எரிக்கப்பட்டதற்கு காரணம்.

நாட்டில் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நாடு எதிா்கொண்டு வரும் இதுபோன்ற பிரச்னைகளை பற்றி பேசாமல், பிற நாடுகள் குறித்து மட்டுமே பிரதமா் மோடி பேசி வருகிறாா்.

15 ஆண்டுகளாக நிதீஷ் குமாா் முதல்வராக பதவி வகிப்பதற்கும் , 6 ஆண்டுகளாக மோடி பிரதமராக பதவி வகிப்பதற்கும் வாய்ப்பளித்தீா்கள். எனினும் இந்த மாநிலம் ஏழ்மையான மாநிலமாகவே இருக்கிறது.

நாட்டை எவ்வாறு வழிநடத்துவது என்பது காங்கிரஸுக்கு தெரியும். விவசாயிகளுக்கு துணையாக நின்று, இளைஞா்களுக்கு எவ்வாறு வேலைவாய்ப்பு அளிப்பது என்பதை காங்கிரஸாா் அறிவா் என்றாா் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com