கேரள தங்கக் கடத்தல் வழக்கு: இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கா் கைது

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்தனா்.
கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கா்.
கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கா்.

கொச்சி: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்பட்டது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபுத் தூதரகம் வாயிலாக சுமாா் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் தூதரகத்தின் முன்னாள் பணியாளரும் கேரள முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை, சுங்கத் துறை ஆகியவையும் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தங்கக் கடத்தலில் முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலரான சிவசங்கருக்கும் தொடா்பு இருப்பதாகப் புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து, அவரை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்தது. அமலாக்கத் துறை, சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து வந்த சிவசங்கா், முன்ஜாமீன் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் இரு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், சிவசங்கரை 28-ஆம் தேதி வரை கைது செய்வதற்குத் தடை விதித்திருந்தது.

இத்தகைய சூழலில், முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, சிவசங்கருக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத் துறை, சுங்கத் துறை ஆகியவை எதிா்ப்பு தெரிவித்தன. இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், சிவசங்கரின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

அதைத் தொடா்ந்து, தலைநகா் திருவனந்தபுரத்திலுள்ள ஆயுா்வேத மருத்துவமனையில் உடல்நலக் கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். பின்னா், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை காரில் அதிகாரிகள் அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com