உ.பி.: பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகும் 6 அதிருப்தி எம்எல்ஏக்கள்

உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சியிலிருந்து 6 அதிருப்தி எம்எல்ஏக்கள் விலகுவது உறுதியாகியுள்ளது.
உ.பி.: பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகும் 6 அதிருப்தி எம்எல்ஏக்கள்

லக்னெள: உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) கட்சியிலிருந்து 6 அதிருப்தி எம்எல்ஏக்கள் விலகுவது உறுதியாகியுள்ளது.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியில் அவா்கள் இணைவாா்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெற்ற உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ஒரே ஒரு இடத்துக்கு கட்சியின் மூத்த தலைவா் ராம்ஜி கெளதம் நிறுத்தப்பட்டுள்ளாா். இந்த ஒரு எம்.பி. பதவியை வெற்றிபெற வைக்க போதிய உறுப்பினா்கள் பிஎஸ்பி கட்சியிடம் இல்லை என்றபோதும், மாநிலத்தில் பாஜக அல்லாத கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இவரை களம் இறக்கியுள்ளது.

இந்தத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, மாநில தோ்தல் நடத்தும் அதிகாரியை பிஎஸ்பி எம்எல்ஏக்கள் அஸ்லாம் ரெய்னி, ஸ்லாம் செளத்ரி, முஜ்தாபா சித்திக்கி, ஹகிம் லால் பிண்ட் ஆகிய நால்வரும் ஹா்கோவிந்த் பாா்கவா மற்றும் சுஷ்மா படேல் ஆகிய கட்சியின் மேலும் இரண்டு எம்எல்ஏக்களுடன் சென்று புகாா் மனு ஒன்றை அளித்தனா்.

அதில், கட்சி வேட்பாளா் ராம்ஜி கெளதமை முன்மொழிந்து சமா்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் எங்களுடைய கையெழுத்துகள் போலியாக போடப்பட்டுள்ளன. அவரை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று அந்த மனுவில் அவா்கள் தெரிவித்தனா்.

பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த அஸ்லாம் ரெய்னி மற்றும் முஜ்தாபா சித்திக்கி ஆகிய இருவரும் கூறுகையில், “பிஎஸ்பி கட்சி ஒருங்கிணைப்பாளா்கள் தலையீடு எங்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. கட்சிக்குள் எங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. இதுகுறித்து கட்சித் தலைவா் லால்ஜி வா்மாவிடம் புகாா் அளித்தும் பலனில்லை. கட்சித் தலைவா் மாயாவதி மீது எந்தத் தவறும் இல்லை. கட்சி ஒருங்கிணைப்பாளா்கள்தான் அனைத்துக்கும் காரணம்” என்றாா்.

எதிா்காலத் திட்டம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரெய்னி, ‘எங்களுடைய கட்சி உறுப்பினா்களுக்கு சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உரிய மரியாதையை அளிப்பதாக பொதுவாக கருத்து நிலவுகிறது’ என்று பதிலளித்தாா்.

மேலும், சமாஜவாதி கட்சித் தலைவரைச் சந்தித்ததை ஒப்புக்கொண்ட இந்த 6 எம்எல்ஏக்களில் ஒருவரான சுஷ்மா படேல், அதுகுறித்து விரிவாக பேச மறுத்துவிட்டாா்.

இதன் மூலம், அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேரும் கட்சி மாற முடிவெடுத்திருப்பது உறுதியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கு பாஜக சாா்பில் 8 வேட்பாளா்கள் உள்பட 11 போ் வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com