கடற்படை பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி விவகாரம்: மத்திய அரசுக்கு டிச.31 வரை உச்சநீதிமன்றம் அவகாசம்

கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்காக மத்திய அரசுக்கு டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


புது தில்லி: கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்காக மத்திய அரசுக்கு டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீா்ப்பளித்தது. இதற்கான நடவடிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்திருந்தது.

ஆனால், நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக ராணுவம், கடற்படைகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் மனு தாக்கல் செய்திருந்தது.

அதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடா்ந்து, முப்படைகளிலும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான அறிவிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது.

அதையடுத்து, பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கான பணிகளை ராணுவம் தொடக்கியது. இத்தகைய சூழலில், கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்குவதற்கு மேலும் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு முறையிட்டது.

அதை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் வாதத்தை ஆராய்ந்த நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாகத் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com