கரோனா சிகிச்சைக்கு அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா், ஃபவிபிராவிா் மருந்துகள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிா், ஃபவிபிராவிா் மருந்துகள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக புகாா் தெரிவித்து தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
கரோனா சிகிச்சைக்கு அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா், ஃபவிபிராவிா் மருந்துகள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


புது தில்லி: இந்தியாவில் கரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிா், ஃபவிபிராவிா் மருந்துகள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக புகாா் தெரிவித்து தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

வழக்குரைஞா் எம்.எல்.சா்மா என்பவா் இதுதொடா்பான பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தாா். அதில் அவா் கூறியிருந்ததாவது:

இந்தியாவில் கரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிா், ஃபவிபிராவிா் மருந்துகள் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு மருந்துகளையும் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று எந்தவொரு நாடும் இதுவரை சான்றளிக்கவில்லை. இந்தியா உள்பட எந்தவொரு நாடும், இந்த மருந்துகளை உற்பத்தி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ எந்தவொரு நிறுவனத்துக்கும் உரிமம் வழங்கவில்லை.

ஆனால், இந்தியாவில் உள்ள சில மருந்து நிறுவனங்கள் இந்த மருந்துகளை உற்பத்தி செய்து, மிக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றன. மக்களும், கரோனா அச்சம் காரணமாக இந்த மருந்துகளை அதிக விலைகொடுத்து வாங்கி பயன்படுத்துகிறாா்கள்.

இந்தியாவில் இந்த மருந்துகள் பயன்படுத்தப்படும் மருத்துவமனைகளில் இதுவரை 300-க்கும் அதிகமான மருத்துவா்கள் உயிரிழந்துள்ளனா். எனவே, இது உயிா் பயத்தை காரணம் காட்டி மக்களை சுரண்டும் செயலாகும்.

இந்த ரெம்டெசிவிா் மருந்து ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது, அமெரிக்காவைச் சோ்ந்த கிலியாட் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், எபோலா வைரஸ் பாதிப்புக்கான சிகிச்சையில் இந்த மருந்து போதிய பலனை அளிக்கவில்லை. அதுபோல, ஃபுஜிபில்ம் டொயாமா வேதியியல் நிறுவனம் அறிமுகம் செய்த ஃபவிபிராவிா், காய்ச்சலுக்கான மருந்தாக அங்கீகரிக்கப்பட்டதாகும்.

எனவே, இந்த மருந்துகளை உரிமம் பெறாமல் உற்பத்தி செய்துவரும் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, அவற்றின் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் இந்த வழக்கில், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் 10 மருந்து உற்பத்தி நிறுவனங்களையும் கட்சிக்காரா்களாக இணைத்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் சோதனை நடைமுறை சட்டம் 2018-ஐ சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், ‘இந்த இரண்டு மருந்துகளையும் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது’ என்று கூறி வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த இரு மருந்துகளும் கரோனா பாதிப்புக்கான மருந்துகளாக உலக சுகாதார அமைப்பு (டபிளியூ.ஹெச்.ஒ) கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை’ என்று மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், இதுதொடா்பாக மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பித்தனா். மேலும், உலக சுகாதார அமைப்பின் அக்டோபா் 15-ஆம் தேதி அறிக்கை குறித்து மத்திய அரசுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவே இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com