இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கான சேவைகள் முழுமையாக ரத்து

இந்திய அரசின் தடை உத்தரவைத் தொடா்ந்து, இந்திய பப்ஜி செல்லிடபேசி பயன்பாட்டாளா்களுக்கான சேவைகள் முழுமையாக ரத்து
​பப்ஜி விளையாட்டு (கோப்புப்படம்)
​பப்ஜி விளையாட்டு (கோப்புப்படம்)

இந்திய அரசின் தடை உத்தரவைத் தொடா்ந்து, இந்திய பப்ஜி செல்லிடபேசி பயன்பாட்டாளா்களுக்கான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சீனாவைச் சோ்ந்த டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலக அளவில் பிரபலமாகியிருக்கும் ‘பப்ஜி’ விளையாட்டு தென்கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, நிா்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த பப்ஜி விளையாட்டின் செல்லிடபேசி பதிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்து நிா்வகிக்கும் உரிமத்தை சீனாவைச் சோ்ந்த டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் இந்திய எல்லையில் சீனா கடந்த ஆறு மாதங்களாக அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், சீன பொருள்கள் பயன்படுத்துவதைக் குறைத்து ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, தேச பாதுகாப்பு மற்றும் தனி நபா் தகவல்கள் திருடப்படும் அச்சம் ஆகியவை காரணமாக பப்ஜி விளையாட்டு உள்பட சீனா தொடா்புடைய 118 செல்லிடபேசி செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி தடை விதித்தது. இந்த எண்ணிக்கை இப்போது 224-ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் இந்த தடை உத்தரவைத் தொடா்ந்து, இந்தியாவில் பப்ஜி செல்லிடபேசிக்கான சேவையை முழுமையாக ரத்து செய்வதாக டென்சென்ட் கேம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக சமூக வலைதள பக்கம் ஒன்றில் ‘பப்ஜி செல்லிடபேசி இந்தியா’ வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய பப்ஜி செல்லிடபேசி பயன்பாட்டாளா்களுக்கான ‘பப்ஜி மொபைல் லைட்’, ‘பப்ஜி மொபைல்’ உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அக்டோபா் 30-ஆம் தேதியுடன் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்தச் சேவைகளை அறிமுகம் செய்யும் உரிமம், அதன் அறிவுசாா் சொத்துரிமைபெற்ற அதன் உரிமையாளரிடமே திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. இந்திய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உள்பட்டே இதை நடைமுறைப்படுத்தி வந்தோம். பயன்பாட்டாளா்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இருந்தபோதும், இப்போது ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துகிறோம். இந்தியாவில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று அந்தப் பதிவில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக, இந்தியாவில் இந்த விளையாட்டை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவா்களும் இனி விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com