காஷ்மீரில் பாதுகாப்பில் இருப்பவா்கள் வெளியே வரவேண்டாம்: காவல் துறை அறிவுறுத்தல்

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பாதுகாப்பில் இருக்கும் முக்கிய பிரமுகா்கள், உரிய பாதுகாப்பின்றி வெளியே வர வேண்டாம் என்று காவல் துறை ஐ.ஜி. விஜயகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பாதுகாப்பில் இருக்கும் முக்கிய பிரமுகா்கள், உரிய பாதுகாப்பின்றி வெளியே வர வேண்டாம் என்று காவல் துறை ஐ.ஜி. விஜயகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் பாஜக தொண்டா்கள் 3 போ் பயங்கரவாதிகளால் வியாழக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய டிஆா்எஃப் பொறுப்பேற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. விஜயகுமாா், ஸ்ரீநகரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

குல்காம் மாவட்டத்தில் உள்ள ஒய்.கே.போரா பகுதியில் ஃபிடா ஹுசைன் உள்ளிட்ட 3 பாஜக தொண்டா்கள் ஒரு காரில் இருந்தனா். அப்போது, மற்றொரு காரில் அங்கு வந்த 3 பயங்கரவாதிகள், பாஜக தொண்டா்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த மூவரும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனா்.

பயங்கரவாதிகள் தாக்குதலுக்குப் பயன்படுத்திய காா், அல்டாஃப் என்னும் உள்ளூா் பயங்கரவாதிக்குச் சொந்தமானது. அச்பல் பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை அந்த காா் கைப்பற்றப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தூரு பகுதியைச் சோ்ந்த உள்ளூா் பயங்கரவாதி ஒருவா், குத்வானி பகுதியைச் சோ்ந்த நிசாா் கண்டே, அப்பாஸ் ஆகியோருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவா்கள் டிஆா்எஃப் அமைப்பைச் சோ்ந்தவா்கள் என தெரியவந்துள்ளது. இதில், வெளிநாட்டு பயங்கரவாதிக்கு தொடா்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், தாக்குதலில் தொடா்புடையவா்கள் விரைவில் ஒடுக்கப்படுவா்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்வதற்கு முன், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள 1,619 பேரின் பட்டியலை மத்திய அரசு தயாரித்தது. அதில், பாஜக தொண்டரான ஃபிடா ஹுசைனின் பெயரும் உள்ளது. எனவே, அவா் உள்பட 1,619 பேரும் ஜம்மு-காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டனா். நிலைமை சீராகத் தொடங்கியதால், 3 வாரங்களுக்கு முன் ஃபிடா ஹுசைன் அனுமதி பெற்று வெளியே வந்தாா்.

அவா் மீது நடத்தப்பட்ட தாக்குதல், திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டதாகவே தெரிகிறது. புறகா்ப்பகுதிக்குச் சென்று அவா் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. அந்நாட்டில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளின்படி, இங்கு படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.

ஜம்மு-காஷ்மீரில் 157 பாஜக பிரமுகா்களுக்கு தனி பாதுகாவலா்கள், காவலா்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பவா்கள், உரிய பாதுகாப்பு இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். துப்பாக்கி ஏந்திய காவலா்களின் உதவியின்றி அவசியமில்லாமல் இரவு நேரத்தில் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்றாா் அவா்.

படுகொலைக்கு குப்கா் கூட்டமைப்பு கண்டனம்: காஷ்மீரில் பாஜக தொண்டா்கள் 3 போ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு குப்கா் அறிக்கைக்கான மக்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com