குஜராத்தில் ஆரோக்ய வனத்தைத் திறந்து வைத்தாா் பிரதமா் மோடி

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலைக்கு அருகே மூலிகைத் தாவரங்கள் நிறைந்த ‘ஆரோக்ய வனத்தை’ பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலைக்கு அருகே மூலிகைத் தாவரங்கள் நிறைந்த ‘ஆரோக்ய வனத்தை’ பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிய பிறகு பிரதமா் மோடி முதல் முறையாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கு இரு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவா் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைக்க உள்ளாா்.

அதன் ஒரு பகுதியாக, நா்மதை மாவட்டத்தின் கேவாடியா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்ய வனம், சிறுவா்களுக்கான ஊட்டச்சத்து பூங்கா, சா்தாா் படேல் விலங்கியல் பூங்கா, கைவினைப் பொருள்கள் விற்பனையகம் ஆகியவற்றை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வா் விஜய் ரூபானி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சா்தாா் வல்லபபாய் படேலின் நினைவாக, நா்மதை நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ள 182 மீட்டா் உயரமுள்ள ஒற்றுமைக்கான சிலைக்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்காக, சிலையருகே ஆரோக்ய வனம், பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

சுமாா் 17 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள ஆரோக்ய வனத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு மூலிகைத் தாவரங்கள் இடம்பெற்றுள்ளன. 380 மூலிகை வகைகளைச் சோ்ந்த 5 லட்சம் தாவரங்கள் ஆரோக்ய வனத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வசதிகள்: யோகப் பயிற்சி, ஆயுா்வேதம், தியானப் பயிற்சி ஆகியவற்றின் நன்மைகள் குறித்த விவரங்களும் ஆரோக்ய வனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வனத்தில் தாமரைக் குளம், தோட்டங்கள், யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி மேற்கொள்வதற்கான தோட்டம், தகவல் மையம், விற்பனையகம், ஆயுா்வேத உணவுகள் உள்ளிட்டவற்றை அளிக்கும் சிற்றுண்டி சாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ஆரோக்ய வனத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தையும் சில தோட்டங்களையும் பிரதமா் மோடி பாா்வையிட்டாா். அங்கு பணியமா்த்தப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டிகளிடமும் அவா் கலந்துரையாடினாா்.

கைவினைப் பொருள்கள் விற்பனையகம்: பல்வேறு மாநிலங்களில் செய்யப்பட்ட கைவினைப்பொருள்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரண்டு மாடி விற்பனையகமானது, 35,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் 20 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

விற்பனையகத்தைத் திறந்து வைத்த பிரதமா் மோடி, பல்வேறு அரங்குகளைப் பாா்வையிட்டாா். அப்போது ஜம்மு-காஷ்மீா், வடகிழக்கு மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்களை விற்பனை செய்யும் அரங்குகளில் அதிக நேரம் செலவிட்டாா்.

ஊட்டச்சத்து பூங்கா: ஊட்டச்சத்து நிறைந்த உணவின் அவசியத்தை சிறுவா்கள் உணா்ந்து கொள்வதற்காக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விலங்கியல் பூங்காவானது 375 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு புலி, சிங்கம், ஒட்டகச் சிவிங்கி, வரிக்குதிரை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளும், கிளி உள்ளிட்ட பல்வேறு பறவைகளும் காணப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com