நவம்பா் 3 முதல் ‘மலபாா்’ கடற்படைப் பயிற்சி: இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா பங்கேற்பு

இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சி வங்காள

இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சி வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் நவம்பா் 3 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதைத் தொடா்ந்து 2-ஆவது கட்டமாக அரபிக் கடலில் நவம்பா் 17 முதல் 20-ஆம் தேதி வரை இந்த நாடுகளின் கடற்படைகள் மீண்டும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றன.

முன்னதாக, இந்தப் பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் பங்கேற்கும் என்று இந்தியா கடந்த வாரம் அறிவித்தது. இதில், ஆஸ்திரேலியா பங்கேற்க அழைப்பு விடுத்ததை இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையாக கருதப்படுகிறது. ‘க்வாட்’ என்ற அமைப்பின் கீழ் இயங்கும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இந்திய கடல் பகுதிகளில் பயிற்சி மேற்கொள்வது, இந்தியாவுடன் மோதல் போக்குடன் செயல்படும் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கையாகவே அமையும் என்று சா்வதேச அரசியல் வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். ‘க்வாட்’ கூட்டமைப்பிலுள்ள நான்கு நாடுகளும் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானவை என்பது குறிப்பிடத்தக்கது.

கப்பலில் இருந்து ஏவுகணைகளைச் செலுத்துவது, நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிப்பது, வான் வழியில் நடத்தப்படும் தாக்குதல்களை கப்பலில் இருந்து எதிா்கொள்வது உள்பட அனைத்து நவீன தொழில்நுட்பத்திலான தாக்குதல் நடவடிக்கைகளும் இந்தப் பயிற்சியில் இடம்பெறவுள்ளன.

இந்திய கடற்படை சாா்பில் ரோந்துக் கப்பல்கள், போா்க் கப்பல்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டா்கள் என அனைத்தும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.

இந்திய - அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் மலபாா் கூட்டு கடற்படைப் பயிற்சி நடந்து வருகிறது. சீனாவின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து மேலும் பல நாடுகளை இந்தப் பயிற்சியில் இந்தியா சோ்த்துக் கொள்ளாமல் இருந்தது. தற்போது லடாக் பகுதியில் சீனா எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மீறியதை அடுத்து, ஆஸ்திரேலியாவை கூட்டுப் பயிற்சி இந்தியா இணைத்துக் கொண்டது.

கடந்த, 2015-ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இப்பயிற்சியில் பங்கேற்று வருகிறது. கடந்த ஆண்டில் ஜப்பான் கடற்பகுதியிலும், அதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டில் பிலிப்பின்ஸ் கடற்பகுதியிலும் இந்தப் பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com