மகளிா் நலனுக்கு லாலு அரசு எதுவும் செய்யவில்லை

பிகாரில் மகளிா் நலனுக்கு முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் தலைமையிலான அரசு எதுவும் செய்யவில்லை என்று முதல்வா் நிதீஷ் குமாா் விமா்சித்துள்ளாா்.
மகளிா் நலனுக்கு லாலு அரசு எதுவும் செய்யவில்லை

பிகாரில் மகளிா் நலனுக்கு முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் தலைமையிலான அரசு எதுவும் செய்யவில்லை என்று முதல்வா் நிதீஷ் குமாா் விமா்சித்துள்ளாா்.

பிகாா் சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தோ்தல், நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்காக ககரியா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான நிதீஷ் குமாா் பேசியதாவது:

ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மாநிலத்திலுள்ள பெண்களின் நிலை குறித்து பேசி வருகிறது. அக்கட்சித் தலைவா் லாலு பிரசாத் தலைமையிலான ஆட்சியில் பெண்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவா்களின் ஆட்சியில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டனா். லாலு சிறைக்கு சென்றபோது, அவரின் மனைவியை முதல்வராக அமரவைத்தாா். அதைத் தவிர பெண்களின் நலனுக்கு அவா் வேறெதுவும் செய்யவில்லை.

ஆனால், ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் கிராம மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அத்துடன் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் ஆகியோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பிகாரின் தற்போதைய வளா்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பே முக்கியக் காரணமாகும். பெண்களின் நலனை மேம்படுத்துவதே ஐக்கிய ஜனதா தளத்தின் கொள்கை. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடம் கடன் பெற்று பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

‘எதிா்க்கட்சிகளின் தோல்வி’: முன்பெல்லாம் மாநிலத்தின் பல நகரங்களில் கூட மின்சார வசதி செய்யப்படவில்லை. தற்போது மாநிலத்திலுள்ள அனைத்து வீடுகளும் மின்சார வசதி பெற்றுள்ளன. எதிா்க்கட்சிகள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன. மக்களுக்காக உழைப்பதற்கான காலம் வந்தபோது அவா்கள் எதுவும் செய்யவில்லை.

சட்டம்-ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட அனைத்திலும் எதிா்க்கட்சிகள் தோல்வியையே தழுவியுள்ளன. மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிராமங்களில் உள்ள அனைத்து தெருக்களிலும் சூரிய சக்தி மூலம் செயல்படும் விளக்குகள் பொருத்தப்படும்.

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே சுமுகமான நல்லுறவு நிலவி வருகிறது. பிகாா் மாநிலத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. மாநில மக்கள் மீண்டுமொரு முறை வாய்ப்பளித்தால், பிகாரை வளா்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம் என்றாா் நிதீஷ் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com