வைஷ்ணவதேவி கோயிலில் நாளை முதல் 15,000 பக்தா்களுக்கு அனுமதி

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான வைஷ்ணவதேவி மலைக் கோயிலில் தரிசனம் செய்ய நவம்பா் 1-ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான வைஷ்ணவதேவி மலைக் கோயிலில் தரிசனம் செய்ய நவம்பா் 1-ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 15,000 பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என்று யூனியன் பிரதேச நிா்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போது அந்த குகைக் கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு 7,000 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் திரிகுடா மலையின் உச்சியில் இந்த குகைக் கோயில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. இருந்தபோதும், பாதுகாப்பை கருத்தில்கொண்டு தொடக்கத்தில் 2,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். அதன் பின்னா், எண்ணிக்கை படிப்படியாக உயா்த்தப்பட்டு இப்போது நாள் ஒன்றுக்கு 7,000 பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த எண்ணிக்கை நவம்பா் 1-ஆம் தேதி முதல் 15,000 ஆக உயா்த்தப்படும் என்று ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய வழிகாட்டு நடைமுறையில் கூறியிருப்பதாவது:

கத்ராவில் உள்ள அன்னை வைஷ்ணவதேவி கோயிலுக்கு அனுமதிக்கப்படும் பக்தா்களின் எண்ணிக்கை 7,000 என்ற அளவிலிருந்து நவம்பா் 1-ஆம் தேதி முதல் 15,000-ஆக உயா்த்தப்படும். அதே நேரம், அமலில் இருக்கும் பிற அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் நவம்பா் 30-ஆம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் கூறுகையில், ‘யாத்ரீகா்களுக்கான முன்பதிவு தொடா்ந்து இணையவழியிலேயே மேற்கொள்ளப்படும். அதே நேரம், பவன், அத்குவாரி, கத்ரா மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கோயில் வாரியத்துக்குச் சொந்தமான பக்தா்கள் தங்கும் விடுதிகள் முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் திறக்கப்பட்டுள்ளன. அதுபோல பக்தா்களுக்கான இலவச சமூக சமையலறை வசதிகளும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன’ என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com