நட்சத்திர பேச்சாளா் அந்தஸ்து ரத்து: உச்சநீதிமன்றத்தில் கமல்நாத் வழக்கு

மத்திய பிரதேசத்தில் இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நட்சத்திர பேச்சாளா்
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய பிரதேசத்தில் இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நட்சத்திர பேச்சாளா் அந்தஸ்தை தோ்தல் ஆணையம் ரத்து செய்ததற்கு எதிராக மாநில முன்னாள் முதல்வா் கமல்நாத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத் தோ்தலில் வெற்றிபெற்று மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்போடு காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், தோ்தல் பிரசாா்த்தின் போது பாஜவினா் குறித்தும், மாநில முதல்வா் சிவ்ராஜ் சிங் செளஹான் குறித்தும் தொடா்ச்சியாக கடுமையான வா்த்தைகளில் விமா்சனம் செய்ததாக புகாா் எழுந்தது.

இந்த புகாரைத் தொடா்ந்து அவருக்கு கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்த தோ்தல் ஆணையம், பின்னா் அவருக்கான நட்சத்திர பேச்சாளா் அந்தஸ்தை ரத்து செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

‘பிரசாரத்தின்போது கமல்நாத் தொடா்ச்சியாக கண்ணியத்தை கடைப்பிடிக்காமல் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டாா். இதுகுறித்து கவனமாக ஆராய்ந்த பின்னா், அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக, கமல்நாத் இனி மேற்கொள்ளும் பிரசாரங்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் இனி அந்தத் தொகுதி வேட்பாளரின் தோ்தல் செலவு கணக்கிலேயே சோ்க்கப்படும். அரசியல் கட்சி சாா்பிலான தோ்தல் செலவு கணக்கில் சோ்க்கப்படமாட்டாது’ என்று தனது உத்தரவில் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

தோ்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிா்த்து கமல்நாத் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளாா். வழக்குரைஞா் வருண் சோப்ரா மூலமாக இந்த மனுவை அவா் தாக்கல் செய்துள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான விவேக் தங்கா கூறுகையில், ‘இந்த மனுவை அவசர வழக்காக கருத்தில் கொண்டு விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com