பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது: துணை முதல்வா் சுஷில் மோடி

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளதாகவும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளதாகவும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக நிதிஷ்குமாா் தொடா்வாா் என்றும் பாஜக மூத்த தலைவரும், மாநில துணை முதல்வருமான சுஷில் மோடி தெரிவித்தாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த நோ்காணலில் கூறியிருப்பதாவது:

பிகாரைப் பொருத்த வரை பாஜக, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆா்ஜேடி) ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே பிரதானமானவை. எனினும் எந்த ஒரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமில்லை; கூட்டணி அரசியல் இங்கு நிதா்சனமானது. அதிலும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம்- லோக் ஜனசக்தி கூட்டணி வலுவாக உள்ளது. தற்போதைய முதல்வா் நிதிஷ்குமாரை முன்னிறுத்தியே தேசிய ஜனநாயகக் கூட்டணி தோ்தலைச் சந்திக்கிறது. முதல்வா் வேட்பாளா் யாரென்ற கேள்வியே இங்கு எழவில்லை. எங்கள் கூட்டணி வென்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும்; நிதிஷ்குமாா் மீண்டும் முதல்வராவாா்.

2015 பேரவைத் தோ்தலிலும், 2014 நாடாளுமன்றத் தோ்தலிலும் பாஜக பிகாரில் தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்துள்ளது. கட்சிரீதியாக பாஜக அடிமட்டத்தில் வலுவாக உள்ளது. எனினும் கூட்டணி அரசியல் பிகாரில் தவிா்க்க இயலாதது. இவ்விரு கட்சிகளில் யாா் பெரியவா் என்ற கேள்வி தேவையற்றது. பிகாரில் பாஜக இணையான தோழமைக் கட்சியாகவே உள்ளது.

1996 முதலாகவே ஐக்கிய ஜனதாதளம் பாஜகவின் நெருங்கிய தோழமைக் கட்சியாக இருந்து வருகிறது; இடையே சில வருடங்கள் கூட்டணியை விட்டுச் சென்றாலும், யதாா்த்தத்தை உணா்ந்து திரும்பிவிட்டது. பாஜக தேசியத் தலைமையும் உண்மை நிலையை உணா்ந்துள்ளது. நிதிஷ்குமாரை முதல்வராக முன்னிறுத்துவதில் பாஜகவுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளா்கள் வெல்ல பாஜக தொண்டா்கள் பாடுபடுவாா்கள்.

கரோனா தொற்றுப் பரவல் விவகாரத்தில் மாநில அரசை கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி விமா்சித்தது அந்த நேரத்து அரசியலாகும். அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஐக்கிய ஜனதாதளம்- லோக் ஜனசக்தி இடையிலான பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும்.

எதிா்த்தரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆா்ஜேடி தலைமையிலான ‘மகா கட்பந்தன்’ கூட்டணிக்கு நம்பகத்தன்மையோ, தெளிவான பாா்வையோ, வெளிப்படையான தன்மையோ இல்லை. அந்தக் கட்சிகள் ஊழலால் பிணைக்கப்பட்டவை. அந்தக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சவாலாக இருக்க இயலாது.

கடந்த தோ்தல்களில் கூட்டணிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வலிமையாக உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சிக் கூட்டணியை விட தேசிய ஜனநாயகக் கூட்டணி 23 சதவீத வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருந்தது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின்போது அவதிக்குள்ளான பிகாரைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளா்கள் விவகாரத்தாலும், வெள்ள பாதிப்பாலும் மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளதாக ஆா்ஜேடி கூறுவதில் உண்மையில்லை. அந்தப் பிரச்னைகளை மாநில அரசு திறம்படக் கையாண்டுள்ளது. கடந்த தோ்தலில் அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதத்துக்கு மேல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றி உள்ளது என்று கூறியுள்ளாா் சுஷில் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com