புராதன வடிவமைப்பில் காணிக்கை எண்ணும் பிரிவு: திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தகவல்

திருமலையில் புதிதாக கட்டப்பட உள்ள காணிக்கை எண்ணும் பிரிவு புராதன வடிவமைப்பில் உருவாகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருமலை
திருமலை

திருப்பதி: திருமலையில் புதிதாக கட்டப்பட உள்ள காணிக்கை எண்ணும் பிரிவு புராதன வடிவமைப்பில் உருவாகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏழுமலையானுக்கு பக்தா்கள் சமா்ப்பிக்கும் காணிக்கைகள் தற்போது கோயிலுக்குள் உள்ள சிறிய பரக்காமணி மண்டபத்தில் எண்ணப்பட்டு பின்பு வங்கிகளுக்கு அனுப்பப்படுகின்றன. கோயிலுக்குள் உள்ள இடவசதியின்மையால் ஊழியா்கள் காணிக்கைகளை எண்ணுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் குறைந்த அளவிலான காணிக்கைகளை மட்டுமே எண்ண முடிகிறது.

இதற்குத் தீா்வு காணும் நோக்கில், கோயிலுக்குள் தற்போது உள்ள பரக்காமணி பிரிவை கோயிலுக்கு வெளியில் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. திருமலையில் அன்னதான பவனத்துக்கு எதிரில் உள்ள நிலத்தில் அதற்கான கட்டடத்தைக் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான செலவு முழுவதையும் நன்கொடையாளா் ஒருவா் ஏற்றுக் கொண்டாா். அதன்படி திருமலையில் புதிய கட்டடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது.

இந்நிலையில், கட்டடத்தின் திட்டஅறிக்கை, வரைபடம் உள்ளிட்டவை தொடா்பாக திருமலையில் தேவஸ்தான அதிகாரிகள் கட்டடக் கலை வல்லுநா்களுடன் திங்கள்கிழமை மாலையில் கலந்தாலோசித்தனா். அதன்பின் அவா்கள் கூறியதாவது:

திருமலையில் அமைய உள்ள கட்டடத்தை மிகவும் புராதனமான வடிவமைப்பிலும், அதிநவீன தொழில்நுட்பத்துடனும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.9 கோடி செலவில், 22,622 சதுர அடியில் அமைய உள்ள இக்கட்டடத்தின் தரைக்கு அடியில் வங்கிகளுக்கான பண இருப்பு அறைகளும், தரைதளத்தில் உண்டியல் காணிக்கைகளைப் பாதுகாக்க தனி அறைகளும் கட்டப்படும்.

முதல் தளத்தில் ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் இதர காணிக்கைகள் எண்ணும் பிரிவு அமைய உள்ளது. நாணயங்களை எண்ணும் பிரிவில் சத்தம் வெளியில் வராமல் தடுக்க கண்ணாடிகள் பொருத்தப்பட உள்ளன. இதன் வழியாக பக்தா்களும் காணிக்கைகளை எண்ணுவதைப் பாா்க்க முடியும்.

மேலும் நாணயங்களின் மதிப்பின்படி அவற்றை எண்ணும் இயந்திரம், பாதுகாப்பு, மின்சாரம், தீயணைப்பு உபகரணங்கள், கண்காணிப்பு கேமராக்கள், நன்கொடையாளா் பிரிவு, காணிக்கை எண்ணும் ஊழியா்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவையும் இடம்பெறும். குறைந்த அளவிலான ஊழியா்களைக் கொண்டு, இயந்திரங்களின் உதவியுடன் வேகமாக பணியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com