அனைவருமே முகக்கவசம் அணிந்தால்.. மருத்துவர் சொல்லும் ரகசியம்

ஒருவேளை அனைவருமே முகக்கவசம் அணிந்தால், நாடு முழுவதும் 90% பொது முடக்கம் அமல்படுத்துவதால் அடையும் இலக்கை பெற முடியும் என்று மருத்துவர் டி. நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அனைவருமே முகக்கவசம் அணிந்தால்.. மருத்துவர் சொல்லும் ரகசியம்
அனைவருமே முகக்கவசம் அணிந்தால்.. மருத்துவர் சொல்லும் ரகசியம்


ஒருவேளை அனைவருமே முகக்கவசம் அணிந்தால், நாடு முழுவதும் 90% பொது முடக்கம் அமல்படுத்துவதால் அடையும் இலக்கை பெற முடியும் என்று மருத்துவர் டி. நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கரோனாவை ஒழிக்க முகக்கவசம் அணிவதால் கிடைக்கும் நன்மையோடு ஒப்பிடுகையில் கைகளை அவ்வப்போது கழுவுவது கூட பலனளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா.. இது பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ? அதைவிடவும் அதிகமாக அது பற்றி தெரியாத விஷயங்கள் அதிகம். ஆரம்பம் முதலே இது ஒரு புரியாத புதிரான தொற்றாகவே உள்ளது.

ஒருவருக்கு இந்த தொற்று வரும் ஆனால், அதற்கான அறிகுறி கூட அவருக்கு இருக்காது, அதேவேளை அந்த தொற்று ஏற்பட்ட ஒருவர் உயிரையே இழந்து விடும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுதான் அதன் அச்சத்தை அதிகமாக்குகிறது.

இதுபற்றி பத்ம பூஷண் விருது பெற்ற மருத்துவர் டி. நாகேஷ்வர் ரெட்டி அளித்திருக்கும் விளக்கத்தைப் பார்க்கலாம்.
நாட்டில் இதுவரை வெறும் 30 லட்சம் பேருக்கு மட்டும்தான் கரோனா தொற்று பரவியிருக்கும் என்று சொன்னால், அது மிகவும் குறைவான மதிப்பீடு. நிச்சயமாக நாட்டில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேருக்கு கரோனா தொற்று பாதித்திருக்கும். ஏன் என்றால், தற்போதைய கரோனா பாதிப்பை விட இரண்டு அல்லது ஐந்து மடங்கு அதிகமானோரின் உடல்களில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. எனவே, பலருக்கும் சத்தமே இல்லாமல் கரோனா தொற்று பாதித்துள்ளது அல்லது அதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால், வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் என்னவாகும்? ஒரு வேளை நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால், கரோனா கட்டுப்படும்.

ஒரு அறைக்குள் இருக்கும் காற்று வெளியேற்றப்பட்டு, புதிதாக காற்று உள்ளே செலுத்தப்பட்டால், அது பல மடங்கு நன்மை தரும். மூடிய அறையில்தான் காற்று வழியாக கரோனா தொற்றுப் பரவும். அதே வேளை, வெளிப்புறங்களில் போதிய சமூக இடைவெளியைப் பின்பற்றினாலே கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தற்போது மிகவும் கவலையை அளிப்பது விமான நிலையங்களில் குளிர்சாதனத்தை இயக்குவதுதான். ஆனால் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், விமானங்களை விட, விமான நிலையங்களே கரோனா பரவும் அபாயப் பகுதிகளாக உள்ளன..

100 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிழைக்கிறார்கள், 50 வயதுக்கு உள்பட்டவர்களும் இறக்கிறார்களே என்ற கேள்விக்கு.. 

தொற்று பாதித்து இரண்டாவது வாரத்தில் ஒரு நோயாளி மருத்துவமனைக்கு வரும் போதுதான் மரணம் நேரிடுகிறது. அதனால்தான் அறிகுறி தென்பட்ட மூன்று அல்லது நான்கு நாள்களுக்குள் மருத்துவரை நாடுங்கள் என்கிறோம்.

மக்கள் கரோனாவை நினைத்து அதிகம் அச்சப்படவோ அல்லது கவலைப்படாமல் இருப்பதோ முக்கியமல்ல. தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிவதை கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும். நாட்டில் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றினாலே 90% பொது முடக்கம் அமல்படுத்துவதால் கிடைக்கும் பயனை அடையலாம் என்கிறது ஆய்வு. பொது முடக்கத்துக்கு பதிலாக முகக்கவசத்தை அணிவதே கரோனா தொற்றில் இருந்து காக்க உதவும்.

இந்திய மக்களுக்கு நான் அளிக்கும் அறிவுரை என்னவென்றால்.. கரோனாவை நினைத்து பயப்பட வேண்டாம், அதற்காக கவனக்குறைவாகவும் இருந்து விடக்கூடாது, சமநிலை அவசியம். பலகட்ட சிகிச்சையின் காரணமாக தற்போது உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக இருங்கள், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். மனித வரலாற்றில் இது ஒரு சிறிய பின்னடைவு அவ்வளவே, நிச்சயம் மீண்டு வரலாம் என்று தெரிவித்துள்ளார் மருத்துவர் நாகேஷ்வர் ரெட்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com