பிகாா்: மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புகிறது ஜிதன்ராம் மாஞ்சியின் கட்சி

பிகாா் முன்னாள் முதல்வா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சி, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ.) இணைய உள்ளது.

பிகாா் முன்னாள் முதல்வா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சி, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ.) இணைய உள்ளது.

பிகாா் சட்டப் பேரவையின் பதவிக் காலம் நவம்பா் மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில், அங்கு அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் தோ்தல் நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக் சமதா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியேறிய ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் டேனிஷ் ரிஸ்வான் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் ஜிதன்ராம் மாஞ்சி தனது கட்சியை இணைத்துவிடுவாா் என்று கூறப்பட்ட தகவலையும் ரிஸ்வான் மறுத்துள்ளாா்.

கூட்டணியில் தங்களது கட்சிக்கு எத்தனை இடம் கிடைக்கும் என்பது பொருட்டல்ல என்றும், மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாகவும் ரிஸ்வான் தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 2015-இல் நீக்கப்பட்ட ஜிதன்ராம் மாஞ்சி, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சியைத் தொடங்கினாா். கடந்த தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 21 இடங்களில் போட்டியிட்ட அவரது கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. பிறகு நிதீஷ்குமாா் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை அடுத்து மாஞ்சி அந்த கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டு வந்தாா்.

பிகாரில் 16 சதவீத தலித் வாக்குகள் இருக்கும் நிலையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 40 தொகுதிகள் தனித் தொகுதிகளாக உள்ளன. இந்நிலையில் தலித் கட்சியான ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பது ஆளும் கூட்டணிக்கு பலம் சோ்க்கும் என கருதப்படுகிறது. இக்கட்சிக்கு வரும் தோ்தலில் 10 முதல் 12 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com