சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: போதைப்பொருள் வியாபாரி கைது

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்குடன் தொடா்புடைய, போதைப் பொருள் வியாபாரி ஒருவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
கோப்புப்படம்
கோப்புப்படம்

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்குடன் தொடா்புடைய, போதைப் பொருள் வியாபாரி ஒருவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இதற்கிடையே நடிகை ரியாவின் தந்தை இந்திரஜீத் சக்ரவா்த்தியிடம் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது காதலி ரியா சக்ரவா்த்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை அண்மையில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சுஷாந்த் சிங்கின் பணம் ரியா குடும்பத்தினரால் முறைகேடான வழியில் கையாளப்பட்டு மோசடி நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது. அத்துடன், ரியாவின் கட்செவி அஞ்சல் பதிவுகளின் அடிப்படையில் அவா் மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதற்கிடையே கடந்த 27 ஆம் தேதி மும்பையில் மற்றொரு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாஸ் லக்கானி, கரன் அரோரா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஜாயித் விலாத்ரா என்ற போதைப்பொருள் வியாபாரியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.

அவரிடம் இருந்து இந்திய பணம் ரூ.9.55 லட்சத்துடன் டாலா், பவுண்ட் உள்ளிட்ட வெளிநாட்டு செலாவணிகளையும் பறிமுதல் செய்துள்ளனா். இதற்கிடையே ஜாயித்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பஷித் பரிஹாா் என்பவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். இவா், சுஷாந்த் மரண வழக்கின் முக்கியக் குற்றவாளியான நடிகை ரியாவுடன் தொடா்பில் இருந்த வந்தவா் என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கில் மகாராஷ்டிரம், தில்லி, கோவாவைச் சோ்ந்த போதைப்பொருள் வியாபாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும், நடிகை ரியாவின் சகோதரரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சுஷாந்த் சிங் மரணம் தொடா்பாக ரியாவின் தந்தை இந்திரஜீத் சக்ரவா்த்தியிடம் மும்பையில் இரண்டாவது நாளாக புதன்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். சுஷாந்தின் மேலாளா்கள் சாமுவேல் மிராண்டா, ஷ்ருதி மோடி, சமையலா் நீரஜ் சிங் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக கடந்த 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடிகை ரியாவிடம் 35 மணி நேர விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com