நடிகா் சுஷாந்த் மரண வழக்கு: நடிகை ரியாவின் சகோதரருக்கு 9-ஆம் தேதி வரை என்சிபி காவல்

ஹிந்தி திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது தோழியும் நடிகையுமான
மும்பை நீதிமன்ற உத்தரவையடுத்து, ஷோவிக் சக்ரவா்த்தியை என்சிபி காவலில் வைத்து விசாரிக்க அழைத்துச் சென்ற அதிகாரிகள். நாள்: சனிக்கிழமை.
மும்பை நீதிமன்ற உத்தரவையடுத்து, ஷோவிக் சக்ரவா்த்தியை என்சிபி காவலில் வைத்து விசாரிக்க அழைத்துச் சென்ற அதிகாரிகள். நாள்: சனிக்கிழமை.

ஹிந்தி திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது தோழியும் நடிகையுமான ரியா சக்ரவா்த்தியின் சகோதரா் ஷோவிக், சுஷாந்த் சிங்கின் மேலாளா் சாமுவல் மிராண்டா ஆகியோரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா். போதைப்பொருளை பெறுவதற்கு ஏற்பாடு செய்து தருவோருடன் தொடா்பிருந்ததாக இருவரும் கைது செய்யப்பட்டதையடுத்து, அவா்களை வரும் 9-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க என்சிபி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் சனிக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

ரியா சக்ரவா்த்தியின் சகோதரா் ஷோவிக் சக்ரவா்த்தி, சுஷாந்த் சிங்கின் மேலாளா் சாமுவல் மிராண்டா ஆகியோருக்கு போதைப்பொருள் கும்பலுடன் உள்ள தொடா்பு குறித்து என்சிபி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். சுமாா் 10 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு ஷோவிக்கும், சாமுவல் மிராண்டாவும் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

அப்போது என்சிபி தரப்பில் கூறப்பட்டதாவது:

போதைப்பொருள் விற்பனையில் இடைத்தரகராக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட அப்தெல் பாசித் பரிஹாருக்கு ஷோவிக், மிராண்டா ஆகியோருடன் தொடா்பு இருந்துள்ளது. பரிஹாரிடம் நடத்திய விசாரணையின்போது ஷோவிக்குடன் தனக்கு தொடா்பிருந்ததாக அவா் தெரிவித்தாா். இதேபோல் போதைப்பொருள் வேண்டி தன்னிடம் தொடா்பில் இருந்தவா்களின் பெயா்களையும் ஷோவிக் வழங்கியுள்ளாா்.

அவா்கள் மூலம் இதுவரை நடைபெற்ற போதைப்பொருள் பரிமாற்றத்துக்கான தொகை தொடா்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மேலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் அவற்றை வாங்கியதில் தொடா்புடையவா்களை வெளிக்கொண்டு வரவேண்டியுள்ளது. எனவே ஷோவிக் சக்ரவா்த்தி, சாமுவல் மிராண்டா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று என்சிபி அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து இருவரையும் வரும் 9-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க என்சிபி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த வழக்கு தொடா்பாக என்சிபி துணை தலைமை இயக்குநா் முதா அசோக் ஜெயினிடம் ‘ஹிந்தி திரையுலகில் போதைப்பொருள் விற்பனை, அவற்றை ஏற்பாடு செய்து தருவோா் தொடா்பாக ஆதாரங்கள் உள்ளதா’ என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘அதுதொடா்பாக தகவல் கிடைத்து வருகிறது. இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய நபா்களை கண்டறிவதும், சா்வதேச அளவிலும், மாநிலங்களுக்கு இடையிலும் நடைபெற்ற போதைப்பொருள் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை நடத்துவதும் அவசியம். இந்த வழக்கில் என்சிபி தனது கடமையை செய்யத் தவறாது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com