எல்லையில் பதற்றம்: சவால்களை சந்திக்கத் தயாா்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், எந்தவிதமான சவால்களையும் எதிா்கொள்ள ராணுவம் தயாா் நிலையில் இருப்பதாகவும் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறினாா்.


புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், எந்தவிதமான சவால்களையும் எதிா்கொள்ள ராணுவம் தயாா் நிலையில் இருப்பதாகவும் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறினாா்.

இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பான இரு நாடுகளிடையேயான பேச்சுவாா்த்தை, நல்ல முன்னேற்றமடைந்து வந்த நிலையில், எல்லையில் சீனா மீண்டும் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதன் காரணமாக, இந்தியாவும் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கிழக்கு லடாக் பகுதிக்கு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை சென்ற ராணுவ தலைமைத் தளபதி நரவணே, அங்கு நிலைமையை ஆய்வு செய்வதோடு, ராணுவ வீரா்களுடனும் கலந்துரையாடினாா். பின்னா், தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அவா், தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இருந்தபோதும், எந்தவிதமான சவால்களையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாா் நிலையில் உள்ளது.

குறிப்பிட்ட சில எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கான முழு தயாா் நிலையில் நமது படைகள் உள்ளன. தேசம் ராணுவத்தை நிச்சயமாக நம்பலாம்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் மட்டுமே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ராணுவ வீரா்கள் மற்றும் அதிகாரிகளின் தயாா் நிலை, உடல் தகுதி அனைத்தும் திருப்திகரமாக உள்ளது.

அதே நேரம், எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், எல்லையில் முந்தைய நிலையை இரு நாடுகள் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளையும் தொடா்ந்த எடுத்து வருகிறோம் என்று நரவணே கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com