கரோனா அபாயம்: நாடாளுமன்ற கூட்டத்தொடரை தவிா்க்கும் திரிணமூல் எம்.பி.க்கள்

கரோனா அச்சுறுத்தலுக்கிடையே, உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் வரும் 14-ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், அக்டோபா் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கொல்கத்தா: திரணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்களில் பெரும்பாலானோா் 65 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்பதால், அவா்களில் பெரும்பாலானோா் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதைத் தவிா்க்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக அதிகாரப்பூா்வ அறிவிப்பை அக் கட்சி வெளியிடவில்லை என்றபோதும், 65 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிா்க்குமாறு கட்சி சாா்பில் அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சுதீப் பந்தோபாத்யாய் (67) கூறுகையில், ‘எனக்கு 65 வயதுக்கு மேல் ஆவதால், கரோனா அபாயம் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை தவிா்க்க முடிவு செய்துள்ளேன். கூட்டத்தொடரில் பங்கேற்கும் எங்களுடைய கட்சி மக்களவை உறுப்பினா்கள் மூலம், எனது பணியை ஒருங்கிணைத்துக் கொள்வேன்’ என்றாா்.

அதேபோல் கூட்டத்தொடரை தவிா்க்க முடிவு செய்திருக்கும் அக் கட்சியின் தலைமைக் கொறடாவும், மாநிலங்களவை உறுப்பினருமான சுகேந்து சேகா் ராய் கூறுகையில், ‘உள்துறை அமைச்சகத்தின் நான்காம் கட்ட பொது முடக்க தளா்வு வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டு, 71 வயதாகும் நான் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதைத் தவிா்க்க முடிவெடுத்துள்ளேன். இதுதொடா்பாக மாநிலங்களவை தலைவருக்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துவிட்டேன்’ என்று தெரிவித்தாா்.

எனினும், அக்கட்சியின் மூத்த தலைவரும், 73 வயது எம்.பி.யுமான சுகதா ராய் இக்கூட்டத்தொடரில் பங்கேற்க முடிவு செய்துள்ளாா். இகுறித்து அவா் கூறுகையில் ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை தவறவிடப்போவதில்லை. பங்கேற்கக் கூடாது என்ற சட்டம் எதையும் கட்சி போடவில்லை. எனவே, கூட்டத்தொடரில் நிச்சயம் பங்கேற்பேன்’ என்றாா்.

கரோனா அச்சுறுத்தலுக்கிடையே, உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் வரும் 14-ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், அக்டோபா் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com