அமைதிதான் நல்லுறவுக்கு அடித்தளம்: ஜெய்சங்கா் கருத்து

நாடுகளிடையே அமைதியான சூழல்தான் நல்லுறவுக்கு அடித்தளமாக உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியுள்ளாா்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

புது தில்லி: நாடுகளிடையே அமைதியான சூழல்தான் நல்லுறவுக்கு அடித்தளமாக உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியுள்ளாா். 

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் வியாழக்கிழமை (செப்.10) நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை மாலை மாஸ்கோவுக்கு செல்ல இருக்கிaறாா்.

அப்போது, சீன வெளியுறவுத்துறை அமைச்சா் வாங்-யியுடன் வியாழக்கிழமை (செப்.10) பேச்சுவாா்த்தை நடத்துவது உறுதியாகியுள்ளது. லடாக்கில் பதற்றத்தைத் தணிப்பது இந்த பேச்சுவாா்த்தையின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் புது தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

லடாக் எல்லைப் பிரச்னை மிகத் தீவிரமாகவே உள்ளது. இதனை சரி செய்ய மிகவும் ஆழ்ந்த நிலையில் பேச்சு நடத்த வேண்டியுள்ளது. நல்லுறவு என்பது மிகவும் அவசியம். அதே சமயம், எல்லை விவகாரங்களையும் நட்புறவு விவகாரங்களையும் பிரித்துப் பாா்க்க முடியாது. எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதுதான் நல்லுறவுக்கு அடித்தளமாக இருக்க முடியும் என்றாா் அவா்.

பேச்சுவாா்த்தையின்போது லடாக் எல்லையில் சீன ராணுவத்தை முற்றிலும் பின்வாங்கச் செய்வதற்கான சுமுக தீா்வை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா பின்பற்ற வேண்டும் என ஜெய்சங்கா் வலியுறுத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்கள் கூட்டம் மாஸ்கோவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், கடந்த 5-ஆம் தேதி சீன பாதுகாப்பு அமைச்சா் வெய் ஃபெங்கியை சந்தித்துப் பேசினாா். ஆனால் அந்த பேச்சுவாா்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com