எல்லையில் படைகளை கூடுதலாக குவிக்கும் சீனா

கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ தெற்கு பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியிருக்கும் நிலையில், அதன் வடக்குப் பகுதியிலும் சீனா தனது படைகளை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக மூத்த அரசு அதிகாரிகள் கூறினர
எல்லையில் படைகளை கூடுதலாக குவிக்கும் சீனா


புது தில்லி: கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ தெற்கு பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியிருக்கும் நிலையில், அதன் வடக்குப் பகுதியிலும் சீனா தனது படைகளை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக மூத்த அரசு அதிகாரிகள் கூறினர். 
கிழக்கு லடாக் எல்லையில் சீன அத்துமீறல் காரணமாக உருவான பதற்றமான சூழலை தணிக்க இரு நாடுகளிடையே ராஜ்ஜீய ரீதியிலும், ராணுவ அதிகாரிகள் அளவிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. 
இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில், கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ தெற்கு பகுதியில் சீனா மீண்டும் படைகளைக் குவித்தது. இதனால், எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையே, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷியா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வியாழக்கிழமை கூட்டாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை தகவல் வெளியிட்டது.  இந்நிலையில், பாங்காங் சோ ஏரியின் வடக்குப் பகுதியில் புதிதாக கூடுதல் படைகளை சீனா புதன்கிழமை குவித்திருப்பது தெரியவந்துள்ளது. 
இதுகுறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் தில்லியில் அளித்த பேட்டி:  கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ தெற்கு பகுதியில் ஏற்கெனவே படைகளை குவித்துள்ள சீனா, இப்போது வடக்குப் பகுதியிலும் படைகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 
எல்லையில் ஃபிங்கர் பகுதிகள் 4 முதல் 8 வரை இந்த ஏரியின் வடக்குப் பகுதி அமைந்துள்ளது. இதில் கடைசி 8-ஆவது பகுதி வரை இந்திய ராணுவம் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இப்போது அந்தப் பகுதியில் 8 கி.மீ. தூரத்துக்கு சீனா அத்துமீறி நுழைந்து படைகளை நிறுத்தியுள்ளது. இதனால், 4-ஆவது ஃபிங்கர் பகுதி வரை மட்டும் இந்திய ராணுவம் ரோந்து செல்ல முடிகிறது.
இந்தச் சூழலில், அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் கூடுதல் படைகளை சீனா குவித்து வருகிறது. இரு நாடுகளிடையே ராஜீய மற்றும் ராணுவ அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. எனவே, சீனாவுக்கு  இணையாக இந்திய தரப்பிலும் படைகளை அதிகரிப்பது தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது என்று அவர் கூறினார்.
ராணுவ அதிகாரிகள் பேச்சு: இதனிடையே, கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே புதன்கிழமையும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், எல்லை நிர்வாகத்துக்கான நடைறைகளை அமல்படுத்துவது குறித்தும் இருதரப்பு அதிகாரிகளும் பேச்சு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com